ஆதமங்கலம்புதூர் மஞ்சுவிரட்டு; சீறிப்பாய்ந்த காளைகள்.. காணக் குவிந்த மக்கள்!
Published : Jan 18, 2024, 9:43 AM IST
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மேலும் பொங்கலையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள ஆதமங்கலம்புதூர், அத்திமூர், வீரளூர் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டார கிராமங்களில் மஞ்சு விரட்டு விழா நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில், 102ஆம் ஆண்டாக காணும் பொங்கல் பண்டிகையையொட்டி மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.
ஒன்றன்பின் ஒன்றாக காளை மாடுகள் அவிழ்க்கப்பட்டு, இலக்கு தூரத்தை நோக்கி சீறிப் பாய்ந்தது. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த காளை மாடுகளுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. தற்போது 102ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த மஞ்சுவிரட்டு போட்டியைக் காண ஆதமங்கலம்புதூர், கேட்டவரம்பாளையம், பாலூர், சிறுவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு கண்டு ரசித்தனர்.