பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் பெண் சிவனடியாரிடம் ஆசி பெற்ற நடிகர் சிவகார்த்திகேயன்! - பொங்கல் பண்டிகை
Published : Jan 17, 2024, 1:51 PM IST
கோயம்புத்தூர்: திரையிலகில் வளரும் இளம் நடிகர்களுள் ஒருவராகவும், குழந்தைகளின் மனம் கவர்ந்த நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபத்திதில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் (Ayalaan) திரைப்படம் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு கடந்த ஜன.12ம் தேதி வெளியானது. தமிழகம் முழுவதும் அயலான் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், ஒவ்வொரு ஊராக நேரில் பட குழுவினுடன் சிவகார்த்திகேயன் சென்று ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
அதன்படி கோவை வந்த அவர், பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். மேலும் அவருடன் பட குழுவினரும் வந்திருந்தனர். கோவிலில் வழிபட்ட பின்னர் வெளியில் வந்த சிவகார்த்திகேயனை ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டனர். இதனையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் சிவகார்த்திகேயனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் சிவகார்த்திகேயனுடன் கைகுலுக்கி பொதுமக்கள் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் அங்கிருந்த பெண் சிவனடியார் ஒருவரிடம் சிவகார்த்திகேயன் ஆசிர்வாதம் பெற்றார். அப்போது அந்த பெண் சிவனடியார், குடும்பத்துடன் நீடூடி வாழ வேண்டும், மேலும் மேலும் நிறைய திரைப்படங்கள் நடித்து நன்றாக வாழவேண்டும் என மனதார வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் திருப்பூர் கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது.