நீண்ட நாட்களுக்கு பிறகு சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு சென்ற ரஜினிகாந்த்.. பெற்றோர் நினைவிடத்தில் மரியாதை! - Nachikuppam village
Published : Sep 1, 2023, 1:41 PM IST
|Updated : Sep 1, 2023, 1:56 PM IST
கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் என்ற கிராமம் நடிகர் ரஜினிகாந்தின் சொந்த ஊராகும். புதன்கிழமை பெங்களூரில் ரஜினிகாந்த் தான் பணிபுரிந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டார். பின் பெங்களூரில் உள்ள தனது அண்ணன் சத்தியநாராயண ராவ் வீட்டில் ஓய்வெடுத்தார்.
அதைத் தொடர்ந்து, நேற்று காலை சாலை மார்கமாக காரில் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டார். அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த நாச்சிக்குப்பத்திற்கு சென்றார். அவரது வருகையை அறிந்த மக்கள் பலரும் அங்கு கூடியிருந்தனர்.
பின்னர், பெற்றோரின் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில், மாலை அணிவித்து, அண்ணன் சத்தியநாராயண ராவுடன் இணைந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் நாச்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர்களை சந்தித்த ரஜினி அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. முதல்முறையாக தனது அண்ணனுடன் ரஜினிகாந்த் சொந்த கிராமத்திற்கு வருகை புரிந்தது, கிராம மக்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர்.