நடிகர்கள் பாபி சிம்ஹா,பிரகாஷ்ராஜ் மீது கிராம மக்கள் புகார்! இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு! - Mahendran president of Petupparai village
Published : Aug 22, 2023, 2:02 PM IST
|Updated : Aug 22, 2023, 5:33 PM IST
திண்டுக்கல்: கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமை வகித்தார். கூட்டத்தில் வருவாய் துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து துறை, காவல் துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து எடுத்துரைத்தனர். தொடர்ந்து மலைப்பகுதிகளில் வனவிலங்குகளால் விவசாய நிலங்கள் தொடர்ந்து சேதம் அடைந்து வருவதாகவும் குற்றம் சாட்டினர். மேல்மலை மலை கிராமங்களில் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் செய்தும் கீழ் மலை கிராமத்தில் காட்டு யானை சேதப்படுத்தி வருவதாக தெரித்தனர்.
இதனால் விவசாயம் மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேத்துப்பாறை பகுதி ஊர் தலைவர் மகேந்திரன் பேசுகையில், வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி நடிகர் பாபி சிம்ஹா மூன்று மாடி கட்டிடம் கட்டி வருவதாக கூறினார்.
மேலும் மலை கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாக குற்றம் சாட்டினர். இதேபோல் பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் அரசு அனுமதியை மீறி ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலை அமைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்தார். பிரபல நடிகர்களான பாபி சிம்ஹா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.