வால்பாறையில் வரையாடுகளுக்கு தொந்தரவு - வனத்துறையினரின் நடவடிக்கை தேவை - Action needed against tourists who
கோயம்புத்தூர்:வால்பாறைக்கு கோடை விடுமுறையினையொட்டி, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகள் அதிக அளவில் நடமாடி வருகின்றன. இந்த நிலையில், அங்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் அப்பகுதியில் சுற்றித்திரியும் வரையாடுகளின் அருகில் சென்று அவற்றைத் தொட முயற்சிப்பது, அவைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது என தொந்தரவு செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது.
மேலும், கோடை விடுமுறை சீசனை ஒட்டி, மலைப்பாதையில் பாதுகாப்புப் பணியில் வனத்துறையினர் ஈடுபட வேண்டும். ஆனால், வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர். வனவிலங்குகளை தொந்தரவு செய்யும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
எனவே, இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை அமைத்தும், வரையாடுகள் உள்ளிட்ட வன விலங்களுடன் புகைப்படம் எடுப்பது மற்றும் அவற்றை தொடுவது போன்று யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. மேலும் இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை பதாகைகளை நட்டுவைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.