Dharmapuri:'மிளகாய் யாகம்' - ஆடி அமாவாசையையொட்டி, தருமபுரியில் கருப்பசாமி கோயிலில் வினோத வழிபாடு - Karuppasamy Temple in Dharmapuri
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நடப்பனஹள்ளி கருப்பசாமி கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 'மிளகாய் யாகம்' சிறப்பு பூஜை செய்து இன்று (ஜூலை 17) வினோத வழிபாடு செய்யப்பட்டது.
தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நடப்பனஹள்ளி கிராமத்தில் ஸ்ரீ பெரிய கருப்புசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம் முதல் நாள் மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று மூலவருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து கோயில் முன்பாக பல்வேறு பூஜைகள் செய்து தீ மூட்டி 108 கிலோ மிளகாயை தீயில் போட்டு கோயில் பூசாரி சாமி ஆடி 11 படிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், படியேறி வரும் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற தேங்காய் உடைத்தும் ஏராளமான பக்தர்கள் கருப்பசாமிக்கு பொங்கலிட்டு பூஜை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
மேலும் பம்பை வாத்தியங்கள் முழங்க சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல்களை நிறைவேற்றிய மூலவருக்கு பக்தர்கள் ஆடு, கோழி, மது, சுருட்டு, மற்றும் மிளகாய் உள்ளிட்டவைகளை நேர்த்திக் கடனாக செலுத்தி வழிபட்டனர்.