போதையில் தகராறு.. நண்பனை கட்டையால் கொடூரமாக தாக்கிய மதுவெறியர் - வீடியோ வைரல்! - Drunkard attacking his friend in Tirupur
Published : Sep 20, 2023, 9:01 AM IST
திருப்பூர் குமார் நகரை அடுத்த வளையங்காடு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன்(36). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 45). நண்பர்களான இருவரும் மதியம் முதல் திருப்பூர் காந்திநகர் அருகே உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் போதை தலைக்கு ஏறிய நிலையில், இரவு இருவரும் டாஸ்மாக் பாரை விட்டு வெளியே வந்துள்ளனர்.
அப்போது அவர்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காளிமுத்து அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து பாண்டியன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளார். நிலை குலைந்து பாண்டியன் தரையில் விழுந்த போதும், காளிமுத்து உருட்டு கட்டையால் தொடர்ந்து தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த பாண்டியனுக்கு 4 பற்கள் உடைந்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் காளிமுத்துவை தடுத்து நிறுத்தி, அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலுன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் காளிமுத்துவை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.