கோவை ஐடி ரெய்டு அலப்பறை.. திமுக நிர்வாகி வீடு முன்பு குவிந்த மக்களுக்கு சேர், பிஸ்கட் ஏற்பாடு! - IT raid at coimbatore
கோவை:மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் இன்று (மே 26) காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, அமைச்சருக்குச் சொந்தமாகச் சென்னை, கோயம்புத்தூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருக்கும் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் என்பவரது கரூர் வீடு மற்றும் அலுவலகங்களில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொள்கின்றனர். மேலும், முக்கிய அரசு ஒப்பந்ததாரர்களுக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டின் முன்னால் கூடிய அவரது ஆதரவாளர்கள், வருமான வரித் துறையினரின் வாகனங்களைச் சேதப்படுத்தியதாகத் தகவல்கள் வெளி வந்துள்ளன.
இந்த நிலையில், கோவையில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயனின் வீட்டின் முன்பு குவிந்துள்ள நபர்களுக்கு பிஸ்கட், தண்ணீர் பாட்டில் மற்றும் சேர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியபோது, அங்குக் குவிந்த தொண்டர்களுக்கு டீ, காஃபி, பிஸ்கட் மற்றும் உணவு பொட்டலங்கள் ஆகியவை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.