பள்ளி வேன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்து: டிரைவர் தப்பி ஓட்டம்; நல்வாய்ப்பாக உயிர் தப்பிய குழந்தைகள் - school van accident
மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, ஆக்கூர் கிராமத்தில் விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி இயங்கி வருகிறது. வழக்கம் போல் இன்று காலை ஆக்கூர், மருதம்பள்ளம், கிடங்கல் சின்னங்குடி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு பள்ளி வேன் வந்துள்ளது. அப்போது அதிவேகமாக வந்த வேன் கிடங்கல் அருகே நத்தம் பகுதியில் வளைவில் திரும்பும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று வேனில் சிக்கி படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு சிகிச்சைக்காக, ஆக்கூர் அரசு மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். வாய்க்காலில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் பள்ளி மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தற்போது, முதலுதவி சிகிச்சை பெற்று மாணவர்கள் வீடு திரும்பினர். இரண்டு ஆசிரியர்கள் காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொறையார் போலீசார் விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய பள்ளி வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.