தேசிய அளவிலான ஃபார்முலா கார் மற்றும் பைக் பந்தயம் - கோவையில் சீறிப் பாய்ந்த வீரர்கள்! - ருஹான்
Published : Aug 28, 2023, 10:35 AM IST
கோயம்புத்தூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான ஃபார்முலா கார் மற்றும் பைக் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் சீறிப்பாய்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஜே.கே.டயர்ஸ், எப்.எம்.எஸ்.சி.ஐ., இணைந்து நடத்தும், 26ஆம் ஆண்டு தேசிய கார் சாம்பியனுக்கான முதல் சுற்று போட்டி கோவையை அடுத்த செட்டிபாளையம் பகுதியில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வே ட்ராக்கில் நடைபெற்றது.
இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், சென்னை, புனே என நாட்டின் பல்வேறு பகுதிகளிலில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். எல்.ஜி.பி., ஃபார்முலா 4 பிரிவின், 15 லேப்கள் கொண்ட முதல் போட்டியில், டார்க் டான் அணியினர் முன்னிலை வகித்தனர்.
முடிவில் அந்த அணியின் திஜில்ராவ், ஆர்யா சிங், தில்ஜித் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன. ப்ரீமியர் எல்.ஜி.பி ஃபார்முலா 4 பிரிவில் ருஹான் ஆல்வா மற்றும் திஜில் ராவ் ஆகியோர் தலா ஒரு பந்தயத்தில் வெற்றி பெற்றனர். மேலும் போட்டியில் கார்கள் போர்க்களம் போல சீறிப்பாய்ந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முதல் பந்தயத்தில் எம்ஸ்போர்ட்டின் பெங்களூரைச் சேர்ந்த ருஹான் அசத்தலாக காரை ஓட்டி கோப்பையைக் கைப்பற்றினார். இதேபோல 2வது பந்தயத்தில் திஜில் மிகவும் திரிலிங்காக காரை ஓட்டிச் சென்று முதலிடம் பிடித்தார். மேலும், ஜேகே டயர், ராயல் என்பீல்டு, ஜி.டி கோப்பையில் பெங்களூர் சிறுவர்கள் மொத்த இடத்தையும் தட்டிச் சென்றனர். முறையே அபிஷேக் வாசுதேவ், உல்லாஸ் நந்தா, சம்ருல் சுபைர் ஆகியோர் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து கோப்பையைக் கைப்பற்றினர்.