கோவையில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்... விவசாயிகள் அச்சம்!! - coimbatore news
Published : Sep 21, 2023, 2:35 PM IST
கோவை: மாங்கரை மற்றும் தடாகம் பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால் மாலை நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தடாகம் அடுத்த மூலக்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கொண்ட கூட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது. இதனையடுத்து அச்சமடைந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சி மேற்கொண்டனர். எனினும் அந்த பகுதியிலேயே சுற்றி வந்த யானைகள் காலை ஆறு மணி அளவில் நஞ்சுண்டாபுரம் கிராமத்திற்குள் புகுந்து குடியிருப்பு வழியாக வனப்பகுதிக்குள் சென்றது.
காட்டு யானைகள் நடமாட்டத்தை அங்கிருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தடாகம் அடுத்த வீரபாண்டி பகுதியில் பெண் யானை ஒன்று அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடியை கடித்ததால் வாயில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.