ஆம்பூர் அருகே தேநீர் கடையில் ஏற்பட்ட தீ விபத்து.. ரூபாய் 2 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்.. - ஆம்பூர் தீயணைப்புத் துறையினர்
Published : Dec 21, 2023, 11:06 PM IST
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் தேநீர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று (டிச 21) மாலை தேநீர் கடையில் பணியாற்றும் நபர் தேநீர் போடுவதற்காக கேஸ் அடுப்பை ஆன் செய்துவிட்டுப் பற்ற வைக்காமல் மறந்து போய் அப்படியே விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வாடிக்கையாளர்கள் தேநீர் கேட்டதால் தேநீர் போடுவதற்காக அடுப்பைப் பற்றவைத்தபோது, கேஸ் சிலிண்டரில் இருந்து அதிக வாயுக்கள் வெளியேறி இருந்த காரணத்தினால் கேஸ் அடுப்பு முழுவதும் தீப்பற்றி எரியத்தொடங்கி உள்ளது.
உடனடியாக கடையில் இருந்து பணியாளர் மற்றும் தேநீர் அருந்தக் கடையில் அமர்ந்திருந்த நபர்கள் அனைவரும் அலறியடித்து வெளியேறியுள்ளனர். பின்னர் இந்த தீவிபத்து குறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தேநீர் கடையில் பற்றிய தீயை அணைத்து, கடையில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு கேஸ் சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த தீவிபத்தில் கடையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகிய நிலையில், இந்த தீவிபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.