தீக் குழியில் தலைக்குப்புற விழுந்த நபரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்! - today news
கடலூர்: சிதம்பரத்தில் நடராஜர் கோயில் கிழக்கு பகுதியில் கீழத்தெரு மாரியம்மன் கோயில் அமைந்து உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் ஆடி மாதத்தில் தீமிதி திருவிழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இக்கோயில் திருவிழா கடந்த ஜூலை 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்த வகையில் நேற்று தீமிதி விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்த குவிந்தனர். அப்போது தீ மிதிக்க வந்த பக்தர் ஒருவர் தலைக்குப்புற தீக் குழியின் நடுவில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ந்து போன சிதம்பரம் தீயணைப்பு துறையில் பணியாற்றும் முகமது சல்மான் என்ற தீயணைப்பு வீரர் தனது உயிரை பணயம் வைத்து உடனடியாக தீயில் இறங்கினார்.
பின் தீ குழியில் விழுந்த அந்த நபரை பத்திரமாக மீட்டார். இந்த சம்பவம் கோயில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கீழே விழுந்த பக்தரை நொடிப் பொழுதில் காப்பாற்றிய தீயணைப்பு துறை வீரருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.