வெடித்துச் சிதறிய செல்போன் பேட்டரி... பரப்பாக்கும் சிசிடிவி காட்சிகள்.. - மகாராஷ்டிரா செய்திகள்
மகாராஷ்டிரா:சதாரா மாவட்டம் அலைப்பேசி வெடித்தது சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கரட் தாலுகாவிற்கு உட்பட்ட உண்டலே கிராமத்தில் உள்ள செல்போன் பழுது பார்க்கும் கடையில் இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. நேற்று (18/05/3023) மாலை பழுது பார்க்கும் கடையில் தனது மொபைல் பேட்டரியை மாற்ற வந்த பொழுது அந்த மொபைல் வெடித்து சிதறியது.
இதனால் வாடிக்கையாளர் மற்றும் கடைக்கார் ஆகிய இருவருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும், “மொபைல் போனில் இருந்து அகற்றப்பட்ட பழைய பேட்டரியை வாடிக்கையாளர் சேதப்படுத்தியதால் பேட்டரி வெடித்தது” என கடைக்காரர் சச்சின் பாவ்கே கூறி உள்ளார். “செல்போன் பேட்டரி வீங்கினால், அதனைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, செல்போனை சார்ஜ் செய்யவோ, சேதப்படுத்தவோ கூடாது.
அதுமட்டும் இல்லாமல் வீங்கிய நிலையில் உள்ள செல்போன்களை அருகில் வைக்கவும் கூடாது. ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை உருவாகலாம் ஆகையால் பேட்டரியை உடனடியாக மாற்ற வேண்டும்” என செல்போன் பழுது பார்க்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வேகமாக வைரலாகி கொண்டு வருகிறது.
நேற்று காலை கேரளா மாநிலத்தில் ஒரு முதியவரின் செல்போன் வெடித்ததைத் தொடர்ந்து நேற்று மாலையே இந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. இதுப் போன்று அடுத்தடுத்து செல்போன் வெடிப்புகள் தொடர்வது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பயத்தையும் உருவாக்கி உள்ளது.
இதையும் படிங்க:சட்டைப் பையில் இருந்த செல்போன் வெடித்து தீப்பிடித்தது; நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்