கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலருக்கு வளைகாப்பு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்.பி! - sulur
Published : Dec 8, 2023, 4:52 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், சூலூர் கருமத்தம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராகப் பணிபுரிந்து வருபவர் இந்து பிரியா. இவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். இந்நிலையில் காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த, அவருடன் பணியாற்றும் சக காவலர்கள் மற்றும் ஆய்வாளர் சுமதி ஆகியோர் முடிவெடுத்து, காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
மேலும், பாரம்பரிய முறைப்படி, வளையல் அணிவித்து மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் 10 வகையான உணவுகளுடன் காவலர் இந்து பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த வளைகாப்பு நிகழ்வை, கருமத்தம்பட்டி துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி முன் நின்று நடத்தினார்.
வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுவதை அறிந்து, சூலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் சர்ப்ரைஸ்ஸாக வருகைப் புரிந்து கர்ப்பிணி காவலர் இந்து பிரியாவிற்கு வாழ்த்து தெரிவித்தார். மகளிர் காவல் நிலையத்தில், காவலர்களே சக காவலருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.