போதையில் பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் - பள்ளி மாணவனின் அசத்தல் பேச்சு - சீர்காழி விவேகானந்தா பள்ளி
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஓவிய போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டிகளில் மொத்தம் 120 பள்ளிகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், போதைப் பொருளுக்கு எதிரான குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர், போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு போட்டிகளை நடத்திய மாவட்ட காவல் துறையை பாராட்டி பேசிய சீர்காழி விவேகானந்தா பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவர் அப்துல் ரகுமான் போதைப் பொருளுக்கு எதிராகவும் பேசினார்.
அப்போது பேசிய மாணவர் அப்துல் ரகுமான், 5 நிமிட சந்தோஷத்திற்காக வாழ்க்கையை தொலைப்பதாகவும், போதையில் ரோட்டில் கிடப்பவர்களை மருத்துவர்கள், காவல் துறையினர் மீட்டு நல்வழிப்படுத்துவதற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தெருமுனை மற்றும் பல்வேறு இடங்களில் குடித்துவிட்டு போதையில் நடந்து செல்லும் பெண்களை கேலி கிண்டல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசிய மாணவனின் விழிப்புணர்வு பேச்சு அனைத்து காவல் துறை அதிகாரிகள் பொதுமக்களின் பாராட்டுதலைப் பெற்றது.