தாம்பரம் விமானிகள் பயிற்சி பள்ளியின் 75-வது ஆண்டு நிறைவு விழா! வானில் சாகசம் நிகழ்த்திய ராணுவ வீரர்கள்!
Published : Nov 5, 2023, 8:16 AM IST
சென்னை: இந்திய விமானப் படையின் போர் விமானிகளுக்கான பயிற்சி பள்ளியின் 75-வது ஆண்டு நிறைவு விழா தாம்பரம் விமானப் படைத் தளத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக விமானப் படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.செளத்ரி பங்கேற்றார்.
விமானிகள் பயிற்சி பள்ளியின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சர்வதேச பயிற்சி கருத்தரங்கம் மற்றும் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெற்றன. இதில் இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.சௌதாரி கலந்து கொண்டு பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள பாரம்பரிய மண்டபத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விமானப்படைக்கு சொந்தமான ஹால் எச்டி2, ப்லட்டஸ், கிரண், எம்ஐ-17, டோமியர் உள்ளிட்ட போர் விமானங்களில் விமானிகள் சாகசம் செய்தனர். இதில் ஒன்பதாயிரம் அடி உயரத்தில் இருந்து, ஒன்பது விமானப்படை வீரர்கள் மூவர்ண கொடி நிறத்தில் இருந்த பேராஷூட் மூலம் கீழே குதித்து சாகசம் நிகழ்த்தினர்.
மேலும், இரண்டு விமானப் படை வீரர்கள் கைகள் கோர்த்தபடி பேராஷூட்டில் கீழே குதித்து சாகசத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிகழ்ச்சியை, விமானப்படை அதிகாரிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண்டு களித்தனர். மேலும், விமான சாகசத்தின் போது விமானங்கள் தாழ்வான பகுதியில் பறந்து, வானில் குட்டிக்கரணம் அடித்து சுற்றி வந்ததை அனைவரும் கண்டு ரசித்தனர்.