சேலத்தில் 60 வயதிலும் அசத்தும் பெண் புகைப்பட கலைஞர்! - Salem woman photographer
சேலம்: தீவட்டிப்பட்டி அருகேயுள்ள நாச்சனம்பட்டியைச் சேர்ந்தவர் 60 வயதான சத்யபாமா. கணவரின் திடீர் மரணத்தால் வறுமையின் பிடியில் சிக்கிய சத்யபாமா, கணவரின் தொழிலான புகைப்படம் எடுக்கும் பணியையே தனது பாதுகாப்பு கேடயமாக மாற்றிக் கவிதா டிஜிட்டல் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
பெருநகரங்களில் புகைப்படக் கலை இன்று பல்வேறு தொழில்நுட்ப வசதிகளுடன் உச்சத்தைத் தொட்டாலும் கிராமங்களில் இன்றைக்கும் சிறிய அளவிலான வசதிகளுடன் திருமணம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளைப் பதிவு செய்யும் புகைப்படக்காரர்கள் மத்தியில் யாருடைய உதவியுமின்றி சவாலான வாழ்க்கையை எதிர் நீச்சல் அடித்து வென்று காட்டியிருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த இந்த சத்தியபாமா.
வறுமையின் பிடியில் சிக்கிய சத்யபாமா எடுத்த முடிவு அவரை சிறந்த சாதனையாளராக மாற்றி இருக்கிறது. கணவரின் தொழிலைத் தொடர்ந்து மேற்கொண்டு தன்னுடைய குடும்பத்தினை வறுமையின் பிடியிலிருந்து மீட்டதாகக் கூறுகிறார் சத்யபாமா. இவர் தொழில்முறை புகைப்படக் கலைஞராகத் தொடர்ந்து உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறார்.
சுப நிகழ்ச்சிகள் மட்டுமன்றி, தீவட்டிப்பட்டி காவல்நிலையம் சார்பில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற நிகழ்வுகளின் போது புகைப்படம் எடுப்பதையும் தொடர்ந்து செய்து வரும் இவர், தொழில்முறை புகைப்படக் கலைஞராகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்.
காலத்தை உறைய வைக்கும் சக்தி புகைப்படக் கலைஞர்களுக்கு உண்டு,நினைவுகளை நிஜம் போலக் காட்டும் புகைப்படங்கள் ஒவ்வொருவருக்கும் பொக்கிஷங்களாக உள்ளன. வாழ்க்கையில் வரும் சோதனைகளைச் சாதனைகளாக மாற்றும் சாமானியர்கள் வரிசையில் 60 வயதிலும் அசராமல் புகைப்படம் எடுக்கும் இந்த சத்யபாமாவும் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.