Himachal flood: மழையின் சீற்றத்தால் அடித்துச்செல்லப்பட்ட நூற்றாண்டு பழமைமிக்க பாலம்!
இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் மண்டி என்னும் மாவட்டத்தில் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க லால் புல் பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
தற்போது பெய்த மழைக்கு பியாஸ் ஆறு மற்றும் சுகேதி காட் ஆற்றின் வெள்ளம் காரணமாக இதுவரை சுமார் 5 பாலங்கள் சில நொடிகளில் அடித்துச் செல்லப்பட்டன. பியாஸ் நதி, இந்த பழைய பாலத்தை மூழ்கடித்து, சில நொடிகளில் அடித்துச் சென்றது. இதேபோல், தாவாடாவில் உள்ள கால் பாலமும் பியாஸ் நதியில் அடித்துச் செல்லப்பட்டது. பாண்டோ-சிவப்தார் பாலமும் ஞாயிற்றுக்கிழமை மாலை பியாஸ் வெள்ளத்தின் பிடியில் சிக்கியது.
சுமார் 100 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த லால் புல் பாலம், பியாஸ் ஆற்றின் வலுவான நீரோட்டத்தைத் தாங்க முடியாமல் அடித்துச் செல்லப்பட்டது. கூனில் உள்ள மண்டி சதர் மற்றும் ஜோகிந்தர் நகரை இணைக்கும் பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. தற்போது பியாஸ் ஆற்றின் அருகே செல்லக்கூட மக்கள் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது.
மறுபுறம், மண்டி மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 21 வாகனங்கள் பியாஸ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதில் 9 லாரிகள், 10 எல்எம்வி வாகனங்கள், 2 பைக்குகள் என வெள்ளம் ஏற்பட்ட சில நிமிடங்களில் அடித்துச் செல்லப்பட்டன. இதுவரை ஆற்றின் வலுவான நீரோட்டத்தில் 21 வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக ஏஎஸ்பி சாகர் சந்திரா கூறியுள்ளார்.
'24 மணி நேரத்தில் ரூ.15 கோடி இழப்பு':முதற்கட்ட அறிக்கையில், 24 மணி நேரத்தில் ரூ.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின்சார வாரியம் சேதத்தை மதிப்பிடும் போது நிர்வாகம் அனைத்து வகையான சூழ்நிலைகளையும் கண்காணித்து வருகிறது என்றும், மழையின் போது மக்கள் கவனமாக இருக்குமாறும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.