சென்னை: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் இந்தியா போட்டியிட விரும்பினால், இளைஞர்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். இவருடைய இந்த கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, பல மருத்துவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வாரத்தில் 70 மணி நேரம் வேலை என்பது, மன அழுத்தம், பதற்றம், முதுகுவலி, மாரடைப்பு போன்றவற்றை ஏற்பட வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பழகுவதற்கு கூட நேரம் இருக்காது:பெங்களூருவைச் சேர்ந்த இருதய நோய் நிபுணர் தீபக் கிருஷ்ணமூர்த்தி, தனது X வலைதளப்பக்கத்தில், “ஒரு நாளைக்கு 24 மணி நேரம். வாரத்தில் 6 நாட்கள் வேலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை, மீதமுள்ள 12 மணி நேரத்தில் 8 மணி நேரம் தூக்கம் என்றால், மீதம் 4 மணி நேரம் இருக்கும்.
பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்திற்கு 2 மணி நேரம் தேவைப்படும். மீதமுள்ள 2 மணி நேரத்தில் பல் துலக்குதல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற வேலைகள் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 12 மணி நேர வேலை என்பதில், மற்றவர்களிடம் பழகுவதற்கு நேரமிருக்காது. உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இருக்காது. பொழுதுபோக்கிற்கு நேரம் இருக்காது, வேலை நேரம் முடிந்தப்பிறகும், கம்பெனியின் இ-மெயில் மற்றும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வாரத்திற்கு 48 மணி நேரம் போதும்: நீரிழிவு நோய் மருத்துவர் அம்ப்ரிஷ் மித்தல் தனது X வலைதளத்தில், “வாரத்திற்கு 70 மணிநேர வேலை என்பது விதிமுறையாகவோ அல்லது பரிந்துரையாகவோ கூட இருக்கக் கூடாது. வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்பதே எதிர்பாக்கப்படும் வேலை நேரமாக உள்ளது. வெற்றியை அடைவதற்காக பலர், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்துள்ளனர். ஆனால் அதை கட்டாயமாக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.