சென்னை: கூந்தல் என்பது பெண்களின் அழகுக்கு மேலும் மெருக்கூட்டும் ஒரு விஷயம். நீண்ட கூந்தல் குறித்து கனவு காணாத பெண்கள் இருக்கவே முடியாது. நமது வீடுகளில் உள்ள பாட்டிகள் ஒட்டு முடியை வைத்து ஜடை பின்னிப் போடுவதை பார்த்திருப்போம். சிலர் கொண்டை போட்டு அதில் பூ முடிந்து அழகு பார்ப்பார்கள். காலப்போக்கில் ஒட்டு முடியும் நாகரீக வளர்ச்சிப் பெற்று ஹேர் எக்ஸ்டென்ஷன் அல்லது முடி நீட்டிப்பு என சந்தைபடுத்தப்பட்டு வருகிறது. இன்றைய காலத்தில் இளம் பெண்கள் ஏராளமானோர் ஹேர் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்துகின்றனர்.
அவர்களின் இயற்கையான கூந்தலுக்கு ஏற்றார்போல் உள்ள ஹேர் எக்ஸ்டென்ஷன், கலர் செய்யப்பட்ட ஹேர் எக்ஸ்டென்ஷன், வடிவங்களில் மெருகேற்றப்பட்ட ஹேர் எக்ஸ்டென்ஷன் என பல வகையான ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் ஆன்லைனிலும், ஆஃப் லைனிலும் கிடைக்கின்றன. இந்த ஹேர் எக்ஸ்டென்ஷன்களை வாங்கும் பெண்கள் எவ்வித வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் அப்படியே அணிந்துகொள்கின்றனர். சிலர் தரமற்ற அழகு நிலையங்களில் சென்று பாதுகாப்பற்ற வகையில் ஹேர் எக்ஸ்டென்ஷன்களை வைத்துக்கொள்கின்றனர். இது உங்களுக்கு எந்த வகையில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.? இதை எவ்வாறு பயன்படுத்தலாம்.? என்பது குறித்து பார்க்கலாம்.
ஹேர் எக்ஸ்டென்ஷன் என்றால் என்ன? ஹேர் எக்ஸ்டென்ஷன் அல்லது முடி நீட்டிப்பு, ஒட்டு முடி என்றெல்லாம் சொல்லலாம். இயற்கையான முடிகள் மற்றும் செயற்கையான முறையிலும் ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் தாயரிக்கப்படுகின்றன. இதை பெண்கள் தங்கள் கூந்தலின் நீளம், அடர்த்தி அல்லது ஸ்டைலை அதிகரிக்க பயன்படுத்தி வருகின்றனர்.
ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்பாட்டால் ஏற்படும் பக்க விளைவுகள்;ஹேர் எக்ஸ்டென்ஷனை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது பலவகையான பக்க விளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக முடி உடைதல், உச்சந்தலையில் எரிச்சல், முடி உதிர்தல், ஒவ்வாமை (Allergy) உள்ளிட்டவை அடங்கும்.
முடி உடைதல்; நீண்ட ஹேர் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்தும்போது அது உங்கள் இயற்கையான முடியை இழுத்து பலவீனம் ஆக்கி உடையச்செய்யும். இதனால் கனமான ஹேர் எக்ஸ்டென்ஷன்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
உச்சந்தலையில் எரிச்சல்;ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் தலைமுடியின் வேர்களை இழுக்கும்போது உச்சந்தலையில் அசவுகரியம் ஏற்பட்டு எரிச்சலை உண்டாக்கும். இதனால் தொடர்ந்து ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, தலைமுடி வேர்களுக்கு ஓய்வு கொடுக்கவும்.
முடி உதிர்வு ஏற்படக் காரணம் என்ன.? ஹேர் எக்ஸ்டென்ஷன்கள் உங்கள் முடி உதிர்வுக்கு நேரடியான காரணியாக இல்லை. ஆனால் இந்த ஹேர் எக்ஸ்டென்ஷன்களை தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் தலையில் இருக்கும் இயற்கையான முடிக்கு அதீத கனம் ஏற்படும் இதன் காரணமாக முடி உடையும். அது மட்டும் இன்றி போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் தலை முடியின் வேர்களில் அழுக்கு படிந்து முடி உதிர்வு ஏற்படும்.
ஒவ்வாமை (Allergy) ஏற்படும் அபாயம் உள்ளதா? நிச்சயமாக பலருக்கு ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்பாட்டால் ஒவ்வாமை ஏற்படலாம். ஹேர் எக்ஸ்டென்ஷன் தயாரிக்கப்படும்போது அதில் பல வகையான பசைகள், இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை சரியான வழிகாட்டுதல் இன்றி பயன்படுத்தும்போது தலையில் அரிப்பு, எரிச்சல், சிவந்துபோதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படலாம். குறிப்பாக இயற்கையான முடியில் இருந்து தயாரிக்கப்படும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களை விட செயற்கையாக தயாரிக்கப்படும் ஹேர் எக்ஸ்டென்ஷன்களால்தான் அதீத ஒவ்வாமை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஹேர் எக்ஸ்டென்ஷனை பக்கவிளைவுகள் இன்றி பயன்படுத்துவது எப்படி.?செயற்கையான அனைத்துமே இயற்கைக்கு புறம்பான எதிர்வினைகளை ஏற்படுத்ததான் செய்யும். ஆனால் வேறு வழி இன்றி சிலவற்ற நாம் பயன்படுத்தியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்போம். அப்போது சில வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு ஓரளவு தீர்வு காண முடியும். அந்த வகையில்;
- ஹேர் எக்ஸ்டென்ஷனை பயன்படுத்தும்போது, தரமான ஹேர் எக்ஸ்டென்ஷன்களை ஆய்வு செய்து வாங்குங்கள்
- நிபுணத்துவம் மற்றும் சான்றிதழ் பெற்ற அழகியல் வல்லுநர்கள் உதவியுடன் ஹேர் எக்ஸ்டென்ஷன் மேற்கொள்ளவும்
- தலை மற்றும் தலைமுடியை சுத்தமாக பராமரியுங்கள்
- ஹேர் எக்ஸ்டென்ஷன் பயன்படுத்தி சீப்பால் தலைமுடியை கோதுவதை தவிர்த்து விட்டு உங்கள் விரல்களை பயன்படுத்தி முடியில் இருக்கும் சிக்கை களையுங்கள்
- சிகை அலங்கார நிபுணரின் ஆலோசனை பெற்று முடி பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துங்கள்
- தலை மற்றும் தலை முடிக்கு அதீத வெப்பம் கொடுக்கும் வகையில் ஹேர் அயனர்கள் உள்ளிட்டவற்றின் பயன்பாட்டை தவிர்க்கவும்
இதையும் படிங்க:நடுராத்திரியில் பசி எடுக்கிறதா? - உங்களுக்கு ஒரு எச்சரிக்கை!