சென்னை:பருவ காலங்களுக்கு ஏற்றார் போல் நாம் சருமத்தை பாதுகாப்பது அவசியம். குளிர்காலத்தில், நமது சருமம் அதிகமாக வறண்டு தோலில் எரிச்சல் ஏற்படும். இதே போல் தான் பச்சிளங்குழந்தைகளின் சருமமும் வறண்டு விடும். இதனால் அரிப்பு, தொற்றுநோய்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமுள்ளன. ஆகவே அதிக முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
ஹார்ஷான சோப்புகளை பயன்படுத்தாதீர்கள்:குளிர்காலத்தில் இயற்கையாகவே சருமம் வறட்சியடையும். இந்த நிலையில் ஹார்ஷான சோப்புகளை பயன்படுத்தினால் குழந்தையின் சருமம், மேலும் வறட்சி அடையும். ஆகவே குழந்தைகளின் மென்மையான சருமத்திற்காக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சோப்புகளையே பயன்படுத்த வேண்டும்.
மாய்ஸ்ட்ரைசிங் செய்ய வேண்டும்:குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமம் ஈரப்பதத்தை அதிகமாக இழக்கும். ஆகவே குளித்தவுடன், குழந்தையின் சருமத்தில் மாய்ஸ்ட்ரைசரை பயன்படுத்த வேண்டும். நல்ல தரமான மாய்ஸ்ட்ரைசர், அதாவது வாசனை திரவியங்கள், வண்ணங்கள் ஆல்கஹால் போன்றவை இல்லாத மாய்ஸ்ட்ரைசரை பயன்படுத்தலாம். ஏனெனில் இவை உங்கள் குழந்தையின் சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.
குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்தில் ஏற்படும் வறட்சியினைப் போக்க பாதாம் எண்ணெய் (Almond Oil), கற்றாழை, ஆலிவ் எண்ணெய் போன்ற இயற்கையான பொருட்களை பயன்படுத்தலாம். அல்லது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பாடி லோஷன்களையும் பயன்படுத்தலாம். இவை குழந்தையின் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும்.