சென்னை:இந்த நவீன உலகிலும் முடியை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நீளமான முடியை விரும்பாவிட்டாலும், அடர்த்தியான மிருதுவான முடிக்காக அதிக மெனக்கெடுத்து தோல்வியைத் தழுவுவர். ஒவ்வொரு பருவநிலைகளுக்கு ஏற்ப நம் உணவுபழக்கம், சரும பராமரிப்பு போன்றவற்றில் சில மாற்றங்களை கொண்டு வருவது போல, பருவநிலைக்கு ஏற்ப கூந்தலை பராமரிப்பது முக்கியம். மற்ற பருவகாலங்களை விட குளிர்காலத்தில் முடி அதிக பிரச்சினைகளை சந்திக்கும். சில நடவடிக்கைகள் மூலம் முன்னெடுப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளை தடுத்து, கூந்தலை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
குளிர்காலத்தில் ஏற்படும் முடி பிரச்சினைகள்: குளிர்ந்த வெப்பநிலையால் முடி தன் ஈரப்பதத்தை இழக்கும். இதனால் முடி வறண்டு காணப்படும். மேலும் தலைமுடி உதிர்வு, உடைப்பு, பிளவு போன்றவை இருக்கும். உச்சந்தலையில் சுரக்கும் இயற்கை எண்ணெய் சுரப்பு குறைந்து பொடுகுத்தொல்லை ஏற்படும். இவற்றில் இருந்து முடியை எவ்வாறு பாதுகாப்பது என்று பார்க்கலாம்.
அடிக்கடி ஹேர் வாஷ்:குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கக் கூடாது. ஏனெனில் உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் குறைந்துவிடும். இதனால் முடி மேலும் வறண்டு விடும்.
வெந்நீர் முடியை அலசக் கூடாது: குளிர்காலத்தில் பலர் வெந்நீரில் தலைக்கு குளிப்பர். உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் அகற்றப்பட்டு முடி, வறட்சியை சந்திக்கும்.
அதிக கெமிக்கல் உள்ள ஷாம்பு:அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவதால் முடி அதன் ஊட்டச்சத்துக்களையும் இழந்து, முடி மெலிவடைதல், முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் எழும்.
ஹேர் ஸ்ட்ரைட்னர் வேண்டாம்:ஹேர் ஸ்ட்ரைட்னர் (Hair Straightener), ஹேர் டிரையர் (hair Dryer) போன்றவற்றின் அதிகப்படியான பயன்பாடு முடியை வறட்சியாக்கும். ஆகவே அவற்றை குறைத்து கொள்வது நல்லது.