தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

'மழலையின் பல் பராமரிப்பு... புன்னகையின் திறவுகோல்!' - குழந்தைகள் நல மருத்துவர்

'நொறுங்கத் தின்றால் நூறு வயது' என்ற பழமொழி உண்டு. இதற்கு உணவினை மென்றுத் தின்றால் நுாறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம் என்பதுதான் பொருள். அப்படி நம் உடலில் மிகவும் இன்றியமையாததாக அமைந்துள்ளது பற்கள். குழந்தைகளின் பற்களை பராமரிப்பது குறித்து நமது ஈடிவி பாரத்திடம் குழந்தைகள் நல மருத்துவ வல்லுநர் விளக்குகிறார்.

baby
baby

By

Published : Sep 24, 2020, 9:27 PM IST

குழந்தைகளின் பற்கள்

குழந்தைகளுக்கு முதன்முதலாக பற்கள் முளைக்கும் தருவாயில் நீராகாரத்திலிருந்து (தாய்ப்பால் உள்பட) திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கின்றனர். குழந்தைகள் வளர வளர ஆரோக்கியமான ஊட்டச்சத்து நிறைந்த திட உணவுகள் கொடுக்கப்படுவது முக்கியமாகும்.

இது குறித்து ஹைதராபாத் ரெயின்போ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் ஆலோசகரான மருத்துவர் ஸ்ரீநிவாஸ் நமினேனி நம்மிடம் பேசுகையில், “பற்கள் பொதுவாக குழந்தைகளுக்குப் பிறந்த ஆறு மாதத்திலிருந்து 18 மாதத்திற்குள் முளைக்க ஆரம்பிக்கும். எனினும், 18-20 மாதங்கள் ஆகியும் குழந்தைகளுக்குப் பல் முளைக்க ஆரம்பிக்கவில்லை என்றால், பெற்றோர் குழந்தைகள் நல மருத்துவரை அணுக வேண்டும்.

இதுபோன்று சில பிரச்னைகள், பற்கள் முளைக்கும்போது உருவாகும் அல்லது மரபணு ரீதியாகவும் ஏற்படும். இதனால் பற்கள் நன்றாக முளைக்காது அல்லது முளைக்காமலேயே போகலாம்” எனக் கூறினார்.

தொடர்ந்து மருத்துவர் ஸ்ரீநிவாஸ் விவரித்ததாவது:

பற்களுடன் பிறக்கும் குழந்தைகள்

குழந்தைகளுக்கு முன்கூட்டியே பற்கள் முளைப்பதால், பல் துலக்குவது என்பது அவர்களின் வாழ்க்கையில் சில சமயங்களில் கடினமான கட்டத்தை உருவாக்குகிறது. உதாரணத்திற்கு, பிறக்கும்போதே பற்களுடன் பிறக்கும் குழந்தைகள். இதைத்தான் Nenotal teeth என்கிறோம். சில நிபந்தனைகளைப் பொறுத்து இந்தப் பற்களை அகற்றலாமா, வேண்டாமா? என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.

எதிர்கொள்ளக்கூடிய பொதுவான பிரச்னைகள்:

  • தாய்மார்கள் தாய்ப்பால் புகட்டும்போது உண்டாகும் சிக்கல்கள்
  • பற்கள் தளர்வாகவோ, தொங்கிய நிலையில் இருப்பதாலோ
  • குழந்தையின் நாக்கிற்கு அடியில் புண் ஏற்படுவது

மேற்கூறிய இந்த மூன்று பிரச்னைகள் இருந்தால் பல்லைத் பிரித்தெடுக்கலாம். ஆனால், குழந்தைகளின் வயதுக்கேற்ப பற்கள் முளைப்பதால் பெற்றோர்கள் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை.

குழந்தைகளுக்குப் பல் துலக்குதல்

பல் துலக்குதல் என்பது நம் அன்றாட வாழ்க்கையோடு இயைந்த செயல்முறையாகும். உடலில் பற்கள் கடினமாக இருப்பதால், மற்ற உறுப்புகளிலிருந்து இது தனித்து காணப்படுகிறது. பற்களில் இயற்கையாவே பாக்டீரியாக்கள் உள்ளன. இவை பற்கள் முளைத்தவுடன் வாய் முழுக்கப் பரவுகின்றன. இந்தப் பாக்டீரியா பரவலை சில சமயங்களில் குழந்தைகளின் உடல்நிலை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் பற்களின் ஈறுகளில் வீக்கம், எரிச்சல், அதிக உடல் வெப்பநிலை போன்ற பல உபாதைகள் ஏற்படும்.

மேலும் குழந்தைகள் சுத்தமில்லாத சில பொருள்களை வாயில்போட்டு சுவைக்க ஆரம்பிக்கும்போது மேற்கூறிய பிரச்னைகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த வகையான அனைத்துப் பிரச்னைகளும் குழந்தைகளுக்கு முதன்முதலாக பற்கள் முளைக்கும்போதே ஏற்படுகிறது.

குழந்தைகளுக்குப் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும்போது அவர்களின்மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால், ஆரம்பகால குழந்தைப்பருவ பல் நோய்கள் பற்கள் முளைக்கும்போது ஏற்படும். இதைக் கவனிக்காவிட்டால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

இது வேகமாகப் பரவக்கூடியதாகவும் குழந்தைகளுக்கு வலியை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இதற்கு வீட்டிலேயே கை வைத்தியம் செய்வதைவிட்டு, அத்துறை சார்ந்த வல்லுநரை அணுகி மருத்துவம் பெறுவதே குழந்தைகளுக்கு நல்லது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

  1. சுத்தமாக உள்ள பொருள்களை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
  2. குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் பல் பரிசோதனைக்கு கொண்டுசெல்ல வேண்டும்.
  3. பரிசோதனைக்கு செல்வதற்கு முன்னால் குழந்தைகளுக்குப் பல் முளைத்திருந்தால் நல்லது. அதனால் என்ன மாதிரியான கவனிப்பு மேற்கொள்ளலாம், பல் முளைக்கும் தருணத்தில் என்ன வகையான ஆகாரங்கள் கொடுக்க வேண்டும் எனத் தெரிந்துகொள்ள வேண்டும்.
  • குழந்தைகளுக்கு முதல் பல் வெளியே தெரிந்தவுடன் சுத்தம் செய்ய வேண்டும்.
  • ஆறு மாதத்தில், சுத்தமான பருத்தி துணி (sterlie cotton cloth) வைத்து குழந்தைகள் பால் குடித்து முடித்தவுடன் பல்லின் மீது பால் மீதம் இருக்காதவாறு நன்றாகத் துடைக்க வேண்டும்.
  • எட்டு முதல் பத்து மாத இடைவெளியில் பிரத்யேக பல் துலக்குவானைப் (silicone finger brush) பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு ஆண்டு கழித்து குழந்தைகளுக்கான பல் துலக்குவானை உபயோகிக்கலாம்.
  1. ஆரம்பத்தில் குழந்தைகள் பல் துலக்குகையில் ஃபுளோரைடு பற்பசை (Fluoride toothpaste) கொடுக்கக் கூடாது. 2-3 மாதங்களுக்குப் பிறகு, இந்த ஃபுளோரைடு பற்பசையை வெறும் 1000 பி.பி.எம். அளவில் கொடுக்க வேண்டும். பின்னர் படிப்படியாக ஒரு நெல்மணி அளவிற்கு கூட்டிக்கொண்டே போகலாம்.
  2. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பல் துலக்க முடியாத நிலையில், தேய்த்துக் கழுவ வேண்டும்.
  3. குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது கூடுதலாக சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அது அவர்களுக்குப் பல வழிகளில் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். மேலும் நான்கு ஆண்டிற்கு சாக்லேட் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்குச் சாப்பிட சாக்லேட் கொடுப்பதைவிட, நாட்டுப் பலகாரங்களை (நமது வீட்டிலோ, உள்நாட்டிலோ செய்யப்படும் தின்பண்டங்கள்) செய்துகொடுக்கலாம்.

குழந்தைகள் அதிகம் பேச முடியாமல் போகும்போது, பெற்றோர் அவற்றை முறையாக கவனிக்க வேண்டும். மேலும் உடனடியாக பல் மருத்துவரையும் அணுக வேண்டும். 'ஆரோக்கியமான உணவுப்பழக்கமும், வாழ்க்கை முறையும் ஒரு சரியான புன்னகையின் திறவுகோல்' ஆகும்.

இவ்வாறு மருத்துவர் விவரித்தார்.

எனவே அனைவரும் குழந்தைகளின் மீதும் அவர்களின் பற்களின் மீதும் அக்கறைச் செலுத்தி கவனத்துடன் பராமரிப்போம்.

இதையும் படிங்க: பிறந்த குழந்தைக்கு அருமருந்தாம் 'தாய்ப்பால்'!

ABOUT THE AUTHOR

...view details