டோக்கியோ:சாதாரண மக்களை விட புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக ஜப்பான் சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. 1.07 மில்லியன் நபர்களின் தரவுகளை ஜப்பான் சுகாதார அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் 1.8 மடங்கு புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், நோய் கண்டறியப்பட்ட இரண்டு ஆண்டுகளில் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
‘தற்கொலை எதற்கும் தீர்வாகாது, அத்தனை பிரச்னைகளுக்கும் ஒரு முடிவு உண்டு’ என சொல்லப்பட்டு வரும் நிலையில் எங்கள் முடிவை நாங்களே தேடிக்கொள்கிறோம் என புற்று நோயாளிகள் பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் பரிதாப நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் கண்டறிதலுக்குப் பிறகு, அதனால் ஏற்படும் அச்சம் மற்றும் உடல் நலக்கோளாறுகள் காரணமாக பலர் தற்கொலை செய்துகொள்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விழிப்புணர்வை புற்று நோயாளிகளுக்கு மட்டும் அல்ல பொதுமக்களுக்கும் வழங்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. புற்று நோயாளிகள் தற்கொலை தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட ஜப்பான் சுகாதார அமைப்பின் தரவுகளை, அந்நாட்டின் சுகாதாரம், தொழிலாளர் மற்றும் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், புற்று நோய் கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொண்ட பிறகு மிக குறுகிய நாள்களிலேயே மீண்டும் புற்று நோய் அபாயத்தை எதிர்கொள்ளும் நோயாளிகள்தான் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்வதாக குறிப்பிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு புற்று நோய் உறுதி செய்யப்பட்ட 1.07 மில்லியன் நோயாளிகளின் தரவுகளை ஜப்பான் சுகாதார அமைப்பின் ஆய்வு குழு ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் நோய் கண்டறியப்பட்ட இரண்டு ஆண்டுகளில் தற்கொலை செய்துகொண்ட நோயாளிகள் மற்றும் சிகிச்சை மேற்கொண்டு குறுகிய நாள்களிலேயே மீண்டும் புற்று நோய் பாதிப்புக்கு ஆளான நபர்களின் எண்ணிக்கையை, சாதாரண மக்களில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடப்பட்டுள்ளது.