சென்னை:ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் வயது வித்தியாசமின்றி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை, நாம் உண்ணும் உணவில் எடுத்துக்கொள்வது தான் இதற்குக் காரணமாக உள்ளது. உடல் எடையைக் குறைப்பதற்காகப் பலர், பல வழிகளைத் தேர்ந்தெடுத்து ஆயிரக்கணக்கில் பணம் செலவு செய்தும் பலன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைகின்றனர். ஆனால் அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல், நம் வீட்டில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியை வைத்தே எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும். அஞ்சறைப் பெட்டியில் உள்ள மசாலாப் பொருட்கள், நமது உடல் வளர்சிதை மாற்றத்தை அல்லது மெட்டபாலிச நடவடிக்கைகளை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாமா?
இலவங்க பட்டை (Cinnamon): பட்டையில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர் பண்புகள் உள்ளதால், இவை உடலின் மெட்டபாலிசத்தின் வேகத்தை அதிகரிக்கின்றன. பட்டையில் இயற்கையாகவே பசியை அடக்கும் தன்மை உள்ளதால், இவை உடல் எடை படிப்படியாகக் குறைய வழிவகுக்கிறது.
காரமான மிளகாய் (Cayenne Pepper):குடை மிளகாய் இனத்தைச் சேர்ந்த இந்த கெய்ன் மிளகாயில் உள்ள காரத்தன்மை, பசியைக் குறைத்துக் கட்டுப்படுத்தும். இந்த மிளகாயில் உள்ள, கேப்சைசின் உடலில் உள்ள கொழுப்பைக் கரைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
சோம்பு: பெருஞ்சீரகத்தில் ஆன்டி ஆக்ஸிடன்டுகளும், விட்டமின் ஏ, சி, மற்றும் டி உள்ளன. இதனால், உடலின் மெட்டபாலிசம் சிறப்பாக இயங்க வழிவகுக்கிறது. சோம்பு விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, விரைவாக உடல் எடையைக் குறைக்க முடியும்.
வெந்தயம்:இதில் அதிகளவு நார்ச்சத்து, பசி தூண்டப்படுவதைக் குறைக்கும். மேலும் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது மட்டுமின்றி ஆக்ஸிஜனேற்ற (oxidative) அழுத்தத்திலிருந்து விடுவிக்கிறது. இதனால் உடல் எடையைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
ஏலக்காய்:இதில் உள்ள மெலடோனின் என்ற அமிலம், உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்க உதவுகிறது. ஏலக்காயில் மலச்சிக்கல் பிரச்சினையைக் குறைக்கும் தன்மை உள்ளது. மேலும் உடலில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற உதவுகிறது. இதனால் எளிதில் உடல் எடையைக் குறைக்கலாம்.