பொதுவாக, உலகம் தன்னைச் சுற்றித்தான் நகருகிறது, எப்போதும் தானே அனைத்திற்கும் மையப்புள்ளியில் இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு தன்னடக்கமின்றி நடந்துகொள்பவர்களை ‘நாசீசிஸ்ட்’ (Narcissist) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
நாசீசிஸ்ட்கள் எப்போதும் தன்னைப்பற்றித் தானே மிகப்பெரிதாக நினைத்துக்கொள்பவர்களாக இருப்பார்கள். உங்களது காதல் துணையிடம் இப்படிப்பட்ட குணங்கள் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால் இந்தக் குறியீடுகள் உங்கள் துணையிடம் இருக்கிறதா என்று பாருங்கள்.
யார் இந்த நாசீசிஸ்ட்கள்?
நாசீசிஸ்ட்கள் தங்களை கடவுள்போல் பாவித்துக்கொள்வார்கள், அவர்களின் அச்சமும், கவலையும், பாதுகாப்பின்மை என்ற சிந்தனையும் தாங்கள் அனைவரையும்விட தனித்துத் திகழ்வதாக நினைக்கும் அவர்களின் எண்ணத்தால் மறைந்துவிடும்.
சுயநலமும், சுய ஆவேசமுமே நாசீசிஸமின் வீரியமிக்க அடித்தளமாகும். உளவியல் வல்லுநர்களின் கருத்துப்படி, இம்மாதிரியான குணம் ஒரு வகையான ஆளுமைப் பிரச்சினையைச் சேர்ந்ததுதான். இந்த ’நாசீசிஸம்’ (Narcissism) என்ற பெயர் கிரேக்க புராணங்களிலிருந்த ’நாசீசஸ்’(Narcissus) என்ற பெயரிலிருந்து வந்தது.
நாசீசஸ் என்பது கிரேக்க புராணத்தின்படி கி.மு. எட்டாம் நூற்றாண்டில் தன் நிழலையே காதலித்த ஒரு குழந்தையின் பெயர். சிக்மண்ட் பெராய்டு இந்தக் கதையில் வந்த அந்தக் கதாபாத்திரம் சுயநல மக்களைப் பிரதிபலிப்பதாகக் கூறுவார்.
அதிகப்படுத்தப்பட்ட வாழ்க்கை லட்சியங்கள், பிரமாண்ட கனவுகள், இவை அனைத்தும் நாசீசிஸ்ட்களின் குணங்கள்.
நாசீசிஸ்ட்கள் நல்ல துணையா?
நாசீசிஸ்ட்கள் மிக கவர்ச்சியாக இருப்பார்கள், நிறைய வெற்றிகளைக்கூட காணுவார்கள், ஆகையால் அப்படி ஒரு காதல் துணை அமைவது நிச்சயம் நல்ல விஷயமாக இருந்தாலும், அது பல சமயங்களில் தவறான முடிவாகக்கூட மாறலாம்.
நீங்கள் ஒரு நாசீசிஸ்டுடன் காதல் உறவில் இருக்க ஆரம்பித்தால், முதலில் அவர்கள் காதலைப் பொழிவார்கள், அடிக்கடி மெசேஜ் செய்வது, கால் செய்வது, பாராட்டுவது என அனைத்தும் மிக அதிகமாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் அவர்களின் சுய லாபத்திற்காகவே இருக்கும்.
உங்களின் அன்பையும், அரவணைப்பையும் வைத்து உங்களை அவர்கள் வசத்தில் வழிநடத்த முயலுவார்கள். உங்களின் காதலி ஒரு நாசீசிஸ்டாக இருந்தால் ஒரு விநோத குணமாற்றத்தை நீங்கள் சீக்கிரம் காண நேரிடலாம்.
அது உங்களுக்கு முற்றிலும் மாறுபட்டதாகத் தெரியும், நீங்கள் காதலித்த நபரே வேறு ஒரு நபராக மாறியதுபோல் இருக்கும். பல நேரங்களில் காதல் உறவு முறிவதற்கு இந்த மாற்றங்களே காரணமாக இருக்கக் கூடும்.