சென்னை: ஆட்டோ இம்யூன் நோய் (Autoimmune Diseases) உள்ள பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது மனச்சோர்வால் பாதிக்கப்படுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆட்டோ இம்யூன் நோய்: முதலில் ஆட்டோ இம்யூன் நோய் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். ஆட்டோ இம்யூன் நோய் என்பது நோய் அல்ல ஒரு குறைபாடே ஆகும். நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பல்வேறு நோய் தொற்று, வைரஸ், கெட்ட பாக்டீரியா மற்றும் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்கள் ஆகியவற்றின் தாக்குதலில் இருந்து நம் உடலை பாதுகாக்கிறது. நம் உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற எதிரிகள் நுழையுமெனின் அவற்றை தாக்கி, நம் உடலை காக்கும்.
யாரை அதிகமாக தாக்கும்:சில நேரங்களில் நம் உடலின் இரத்த வெள்ளையணுக்களை கிருமிகள் என நினைத்து தாக்குவதால் ஆட்டோ இம்யூன் குறைபாடு ஏற்படுகின்றன. இந்த குறைபாட்டின் காரணமாக டைப் 1 நீரிழிவு நோய், மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், நரம்பு மண்ட பிரச்சினைகள் போன்ற நோய்கள் ஏற்படும். இந்த ஆட்டோ இம்யூன் குறைபாடு ஆண்களை விட பெண்களையே அதிகமாக தாக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பெண்களில் X குரோமோசோம்கள் நோயெதிர்ப்பு அமைப்புடன் தொடர்புடைய பல மரபணுக்களை கொண்டுள்ளன. இதனால் ஆண்களை விட பெண்களுக்கு தொற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆனால் பெண்களின் மரபணுக்களுடன் நோயெதிர்ப்பு அமைப்புகள் தொடர்புடையதால் ஆட்டொ இம்யூன் குறைபாடு பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றன. ஆட்டொ இம்யூன் குறைப்பாட்டால் தற்போது ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளார்.
சமீபத்தில் திரைப்பட நடிகை சமந்தாவும் இந்த ஆட்டோ இம்யூன் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆட்டோ இம்யூன் குறைபாடு உள்ள பெண்களுக்கு கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது மனச்சோர்வால் பாதிக்கப்படுவார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆராய்ச்சியில் நிரூபித்துள்ளனர். இது குறித்து, கரோலின்ஸ்கா சுற்றுச்சூழல் மருத்துவ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் எம்மா ப்ர்ன், “ஸ்வீடனில் 2001 முதல் 2013 வரையிலான காலக்கட்டத்தில், குழந்தைப் பெற்ற பெண்களை அடையாளம் காண, ஆராய்ச்சியாளர்கள் ஸ்வீடிஷ் மருத்துவ பிறப்பு பதிவேடு தரவை பயன்படுத்தி உள்ளனர்.
8 இலட்சத்திற்கும் அதிகமான தாய்மார்கள் மற்றும் கர்ப்பமுற்ற 13 இலட்சம் பெண்களின் தரவுகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் ஆட்டோ இம்யூன் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்தின் போது மனச்சோர்வால் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. கர்ப்பக்காலத்தில் மனச்சோர்வில் இருப்பது தாய் மற்றும் சேய் இருவருக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
இதையும் படிங்க:தண்ணீர் பாட்டிலில் 2.4 லட்சம் பிளாஸ்டிக் துகள்கள்! அச்சுறுத்தும் மைக்ரோ பிளாஸ்டிக்! தீர்வு என்ன?