சென்னை: காலை உணவை ஒருவர் முழுமையான ஆரோக்கியத்துடன் உட்கொள்ளும்போது, அந்த நாள் முழுவதும் அவர் சுறுசுறுப்போடும், பணிகளை மேற்கொள்வதில் நேர்த்தியோடும் செயல்படுவார். ஆனால் நம்மில் பலர் கலை உணவை கடமைக்காகவும் அதிலும் பலர் காலை உணவை முற்றிலும் தவிர்த்தும் வருகின்றனர். இது காலப்போக்கில் அவர்களின் ஆரோக்கியத்தை மட்டும் இன்றி வாழ்க்கையின் முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலர் தங்கள் காலை உணவில் சாலடுகளை உட்கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
காலையிலேயே பச்சைக் காய்கறி, தானியங்கள், கீரை என்று முகம் சுளிக்க நேரிடும். ஆனால் அதைப் பழக்கப்படுத்திக்கொள்வதன் மூலம் உங்கள் வாழ்கையில் ஏற்படும் ஒரு சிறந்த மாற்றத்தைக் கண் எதிரே பார்ப்பீர்கள். வழக்கமான உணவு முறையில் இருந்து மாற்றம் பெற்று, முட்டைக்கோஸ் அல்லது கீரை, வெண்ணெய், தக்காளி, ஆலிவ் எண்ணெய், விதைகள் மற்றும் புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த உணவுகள் இருப்பதால் உங்கள் நாள் ஆரோக்கியமான நாளாக ஆரம்பமாகும்.
காலை உணவு சாலட்டில் சேர்க்க வேண்டிய பொருட்கள்;இந்த சாலட்டிற்கு கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவற்றின் கலவை தேவைப்படுகிறது. இதனால் அதற்குத் தகுந்தார்போல் நீங்கள் உணவுப் பொருட்களைத் தேர்வு செய்ய வேண்டும். பச்சை கீரை, ஸ்வீட் பொட்டேட்டோ, வெள்ளைச் சோளம், சிவப்பு அரிசி, பூசணிக்காய் ஆகியவற்றில் சிறந்த கார்போஹைட்ரேட் அடங்கியுள்ளன.