தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

சம்மரில் சருமம், தலைமுடியை பராமரிப்பது எப்படி?

கோடை காலத்தில் சருமத்திலும், தலைமுடியிலும் அதிக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், அவற்றை சிறப்பு கவனம் செலுத்தி பராமரிக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Precautionary
கோடை

By

Published : Apr 5, 2023, 2:19 PM IST

ஹைதராபாத்: கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோடை காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுதல், உடல் சூடு அதிகரிப்பு, டீஹைட்ரேஷன் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது சருமத்திலும், தலைமுடியிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. வியர்க்குரு, தோல் அரிப்பு, வறண்ட சருமம், பொடுகு, முகப்பருக்கள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் மக்கள் கோடை காலத்தில் சருமத்தையும், கேசத்தையும் பராமரிக்க சிறப்பு கவனம் தேவை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தோல் மருத்துவரான ஆஷா சக்லானி கூறும்போது, "கோடை காலத்தில் தலை முடி மற்றும் தோலில் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வெளியில் அதிக நேரம் இருப்பவர்கள் அல்லது வெயிலில் அதிக நேரம் இருப்பவர்களுக்கு ஸ்கின் பர்ன், சரும வறட்சி ஏற்படக்கூடும். அதிகப்படியான வியர்வை வெளியேறுவதால், வியர்க்குரு, சொரியாசிஸ், படர்தாமரை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் வியர்வை காரணமாக, தோல் வெடிப்பு, தடிப்புகள், அரிப்புகள், பருக்கள், தோல் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

கோடையில் இறுக்கமான ஆடைகள் அணிவதால் போதிய காற்றோட்டம் இல்லாமல், தொடைகள், அக்குள், பிறப்புறுப்பு போன்ற இடங்களில், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. வெப்பம் காரணமாக அடிக்கடி குளிக்க நேரும்போது, அதிகளவு ரசாயனங்கள் கொண்ட சாம்பு, சோப்புகளை தொடர்ந்து பயன்படுத்துவதால், தலையில் பொடுகு, பேன், அரிப்பு, முடி உடைதல் போன்றவையும், சருமத்தில் பருக்கள், சிவப்பு நிற தடிப்புகளும் ஏற்படும்.

இதனால் மக்கள் கோடை காலத்தில் தோல் உள்பட முழு உடலையும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டியது அவசியம். குறிப்பாக சென்சிடிவ் சருமம், அலர்ஜி, தோல் நோய்கள் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சுகாதாரத்துடன் இருப்பதோடு, சரியான உணவு முறையையும் பின்பற்றினால் இந்த கோடை வெப்பத்தை நம்மால் எதிர்கொள்ள முடியும்.

கோடையில் பின்பற்ற வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

  • எளிதில் செரிமானம் ஆகக்கூடிய லேசான, சூடான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
  • பழங்கள், திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். இளநீர், மோர், தயிர், பழச்சாரு போன்ற உடலை குளிர்விக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • தினமும் இரண்டு முறை குளிக்க வேண்டும். அதேநேரம் குளிப்பதற்கு முன்பு வியர்வையை உலர வைக்க வேண்டும்.
  • அதிக ரசாயனங்கள் கொண்ட சோப்புகள், ஷாம்புகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • தினமும் சருமத்தில் ஏதேனும் ஒரு மாய்ஸ்சரைசர் அல்லது கிரீமை பயன்படுத்த வேண்டும். வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும்.
  • பருத்தி ஆடைகளை, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
  • அடிக்கடி ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிக வியர்வை ஏற்பட்டால், தலைமுடியை காற்றில் உலர வைக்க வேண்டும்.
  • குத்தும், எரியும் வகையான வியர்க்குரு ஏற்பட்டால், அதற்கு ஏற்றார்போல் பவுடர், கற்றாழை ஜெல் அல்லது லோஷனை பயன்படுத்தலாம். அரிப்பு, அலர்ஜி உள்ளவர்கள் மருத்துவரை அணுகி இவற்றை பயன்படுத்த வேண்டும்.
  • சருமத்தில் அதிகப்படியான அரிப்பு, எரிச்சல், வீக்கம், வலி போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: கோடைகால வெயிலை சமாளிக்க 5 பழக்கலவையிலான ஸ்மூத்திஸ்கள்!

ABOUT THE AUTHOR

...view details