கரோனா நோய்த்தொற்றுப் பரவலால் தற்போது மக்கள் உடல் உழைப்பில்லாமல் முடங்கியுள்ளனர். உலகளவில் பாதிக்கும்மேல் மக்கள் வீட்டிலிருந்தே பணிபுரிவதால், அவர்களின் வாழ்க்கை நடைமுறை மோசமாகப் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை முறையும் மாறியுள்ளது.
மக்கள் எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதாலும் மிதமிஞ்சிய அளவு சாப்பிடுவதாலும் அவர்களின் உடல் எடை கூடுகிறது. இதுதான் மக்களின் மிகப்பெரிய கவலைக்கான காரணமாகும்.
இது குறித்து ஆப்பிள் மருத்துவமனை மருத்துவர் சஞ்சய் கே. ஜெயின் நம்மிடம் விவரித்த அம்சத்தை தொகுப்பாக அளிக்கின்றோம்...
உடல் பருமன் என்பது அதிக உடல் எடையைக் குறிப்பதாகும். இதனை உடல் எடையை, உயரத்தால் வகுக்கும்போது தெரிந்துகொள்ளலாம். இம்முறை மூலம் நாம் எந்த வகையான உடல்பருமனில் இருக்கிறோம் என்பதை அறியலாம்.
உடல் பருமனுக்கான காரணங்கள்
மருத்துவர் சஞ்சய் முக்கியமான இரண்டு வகையான உடல்பருமன் குறித்து நம்மிடம் விவரிக்கிறார். அவை:
- முறையாக உணவு உட்கொள்ளாமல் இருத்தல் அல்லது அதிகளவு உணவு உட்கொள்ளுதல்
- உடல் செயல்பாடு இல்லாதது (உடல் உழைப்பு, உடற்பயிற்சி).
மற்றும் பிற காரணிகளில் மரபியலின் பங்கு இருக்கலாம். அதாவது, பரம்பரை பரம்பரையாக, வேறு சில நோய்கள், அதற்கு அளிக்கப்படும் மருந்துகள் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை நடைமுறைகள்.
இன்றைய கடினமான சூழ்நிலையில், நாம் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாம் காலை எழுந்தவுடன் நேரடியாக கணினி முன்பு அமர்ந்துவிடுகிறோம். அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது உண்டாகும் கட்டுப்பாடுகள் வீட்டில் இல்லாததால், நாம் நினைத்ததை அதிகளவில் உண்கிறோம்.
இதுதவிர, இந்த மாதிரியான மன அழுத்தமில்லாத வாழ்க்கை உங்களை முற்றிலும் நிம்மதியாக உணரவைக்கிறது. இவை அனைத்தும் ஒரு வழியில் உடல் பருமனை அதிகரிக்க வழிவகுக்கிறது.
இது எதற்கு வழிவகுக்கும்?
உடல்பருமன் பலவகையான நோய்களுக்கு வழிவகுக்கும். அந்த நோய்கள் பின்வருமாறு:
- உயர் ரத்த அழுத்தம்
- நீரிழிவு நோய்
- அதிக கொழுப்புச்சத்து
- எலும்புச் சிதைவு நோய் (ஆஸ்டியோபோரோசிஸ்)
- கீல்வாதம்
- இதய நோய் அல்லது பக்கவாதம்
- சிறுநீரக செயலிழப்பு
- கல்லீரல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்கள்
அதிகமாகச் சாப்பிடுவதை தவிர்க்கவும்
அதிகப்படியான உணவை சாப்பிடுவதைத் தவிர்ப்பதற்காக, ஒரு அட்டவணையைத் தயார்செய்து, அதை நாள்தோறும் தவறாமல் பின்பற்ற வேண்டும். அந்த 24 மணிநேர அட்டவணையில் சரியான உணவு நேரங்களைச் சேர்த்து, இரண்டு உணவுகளுக்கு இடையில் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இதன்மூலம் உணவுக் கட்டுப்பாட்டை ஒரு நாள் அல்லது முழு வாரமும் கடைப்பிடிக்கலாம். நீங்கள் ஏற்கனவே அதிக உடல் எடையுடன் இருந்தால், உங்கள் அன்றாட உணவிலிருந்து தேவையற்ற கலோரிகளைக் குறைக்க விரும்பினால் நீங்கள் ஒரு உணவியல் வல்லுநரை அணுகலாம். அவர் உங்களுக்குச் சரியான உணவு விளக்கப்படத்தை வழங்க முடியும்.