தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

Artificial Kidney: சிறுநீரகம் செயலிழந்தால் இனி கவலையில்லை.. செயற்கை சிறுநீரகத்தைக் கண்டுபிடித்துள்ள ஆய்வாளர்கள்.! - செயற்கை சிறுநீரகம் இந்தியா

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதிய செயற்கை சிறுநீரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது அடுத்த கட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 3:59 PM IST

Updated : Sep 1, 2023, 3:49 PM IST

நியூயார்க்:சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் புதிய செயற்கை சிறுநீரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இவர்களின் இந்த கண்டுபிடிப்பு மருத்துவக் குழுவின் தேவை மற்றும் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அடுத்த கட்டமாக விலங்குகளில் பொருத்தப்பட்டு ஆய்வு நடத்திய பிறகு மனிதர்களின் உடலில் பொருத்தி சோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இது மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் இதுதொடர்பான கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், இந்த செயற்கை சிறுநீரகம் மனித உடலில் இயற்கையாக இருக்கும் சிறுநீரகம் மேற்கொள்ளும் அத்தனை வேலைகளையும் திறம்படச் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சிறுநீரக நோயாளிகள்;உலக அளவில் சுமார் 850 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 5 முதல் 7 விழுக்காடு என்ற வகையில் இந்த எண்ணிக்கை கடந்த 2007ஆம் ஆண்டு கணக்குப்படி அதிகரித்து வருகிறது.

அதிலும் குறிப்பாகத் தைவான், ஜப்பான், மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் சிறுநீரக செயலிழப்பு விகிதம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் இந்தியாவைப் பொருத்தவரை மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காடு மக்கள் சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் சிறுநீரக இழப்பு காரணமாக டயாலிசிஸ் செய்து வருகின்றனர்.

டயாலிசிஸ் மேற்கொள்ளுதல்;டயாலிசிஸ் என்பது அவ்வளவு எளிதான ஒரு செயல்பாடு அல்ல. ஒவ்வொருமுறை டயாலிசிஸ் மேற்கொள்ளும்போதும் அந்த நோயாளி பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது குறைந்து விடும். நாள் ஒன்றுக்கு இவ்வளவு தான் உட்கொள்ள வேண்டும் என உணவைக் கிராம் கணக்கில் எடை போட்டுத்தான் உட்கொள்ள முடியும்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் அதற்குப் பல லட்சம் செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கிறது. அது மட்டும் இன்றி சிறுநீரகம் நன்கொடையாகக் கிடைக்கப் பெறுவதில் பெரும் சிக்கல் இருக்கிறது. இந்த சூழலில் ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் நோயாளிகள் மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடிகிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பிற்கான காரணம்; இந்த சூழலில்தான், சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் மாற்று அறுவை சிகிச்சை நாடுவது மற்றும் டயாலிசிஸ் போன்ற பெரும் துன்பங்களை எதிர்கொள்வது உள்ளிட்ட சிக்கல்களிலிருந்து விடுபட மாற்று வழி தேவை என்ற அடிப்படையில் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்த ஆய்வில் அவர்கள் செயற்கை சிறுநீரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த செயற்கை சிறுநீரகம் இரத்தத்தை வடிகட்டுதல், உடலின் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட மனித சிறுநீரகம் மேற்கொள்ளும் அத்தனை பணிகளையும் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள சிலிக்கான சவ்வுகள் உயிரியக்கத்தினுள் இருக்கும் நோயாளியின் சிறுநீரக செல்களை பாதுகாக்க உதவும்.

இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த செயற்கை சிறுநீரகம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) தேவைக்கேற்ப, முதலில் விலங்குகளிலும், இறுதியில் மனிதர்களிலும் சோதனை மேற்கொள்ளப்படும். சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் இதைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு மருந்து தேவை இல்லை என்பதை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து இந்த கண்டுபிடிப்பு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும்.

இதையும் படிங்க:புற்றுநோய்க்கு மருந்து புகையிலையில் உள்ளதா? - ஆராய்ச்சியில் அதிர்ச்சி!

Last Updated : Sep 1, 2023, 3:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details