டெல்லி:ஒரு தாயின் உணவு முறைப் பழக்கம் என்பது அவரது குழந்தையை மட்டும் அல்ல அவரது பேரக்குழந்தையையும் சென்றடையும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மோனாஷ் பயோமெடிசின் டிஸ்கவரி இன்ஸ்டிடியூட் (Monash Biomedicine Discovery Institute) மேற்கொண்ட ஆய்வு தொடர்பான கட்டுரை நேச்சர் செல் பயாலஜி (Nature Cell Biology) இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தாய் ஒருவரின் உணவு முறை அவரின் பேரக்குழந்தையின் மூளை செயல்பாடுகளை மேம்படுத்த உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும்போது சத்தான உணவுகளை உண்ண வேண்டும் அது குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். பிரசவ காலத்தில் தாயின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் என்றெல்லாம் மருத்துவர்களும், வீட்டில் இருக்கும் பெரியவர்களும் சொல்லிக் கேள்விப்பட்டு இருப்போம்.
ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு கர்ப்பிணிப் பெண் ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியம் மற்றும் அறிவான தலைமுறையை உருவாக்குவாள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் இதைத் தான் ஆய்வாளர்களின் அசாத்திய கண்டுபிடிப்பு உறுதி செய்திருக்கிறது.
ஒரு தாய் கர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவு அவரது குழந்தையின் ஆரோக்கியத்தையும் கடந்து அவரது பேரக்குழந்தையின் மூளை ஆற்றலை ஊக்குவிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க:பதின்ம வயதினர் இடையே அடிக்கடி ஏற்படும் தலைவலி, தற்கொலை எண்ணத்துடன் தொடர்புடையதா?
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆப்பிள், துளசி, முனிவர் மூலிகை, ரோஸ்மேரி, தைம், ஆர்கனோ (அம்மா சீரகம்) உள்ளிட்டவற்றை உட்கொள்ளும்போது அவற்றில் இருக்கும் சத்துக்கள் வயிற்றில் இருக்கும் குழந்தையைத் தாண்டி அந்த குழந்தையின் மூளை மரபணுவிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டு சேர்க்கும் என ஆய்வாளர்கள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.
மனித மூளையில் உள்ள நியூரான்களில் தலைமுடியை விடப் பல மடங்கு மெல்லிய ஆக்சோன்கள் (axons) காணப்படுகின்றன. சுமார், 8,50,000 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ஆக்சோன்களின் மரபணு மாதிரிகள் குறித்துத் தெரிந்துகொள்ள ஆய்வாளர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர். அதன் அடிப்படையில் விலங்குகள் வயதாகும்போது அவற்றின் மூளையில் உடையும் தன்மையுடைய ஆக்சோன்களை ஆய்வாளர்கள் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்த ஆய்வில், மூளையின் நியூரானில் உள்ள ஆக்சோன்கள் உடைவதை உணவு முறையால் கட்டுப்படுத்த முடியுமா என்பதே அந்த ஆய்வின் முக்கிய நோக்கம். அதன் அடிப்படையில்தான் ஆப்பிள் மற்றும் சில மூலிகைகளில் மூளையின் ஆரோக்கியத்தைத் தலைமுறைக்கும் கொண்டு செல்லும் ஊட்டச்சத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வாளர்களின் இந்த ஆய்வு இன்றைய தலைமுறையினருக்கு மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும் சூழலில், கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உணவுப்பழக்கத்தில் ஆரோக்கியத்தைத் தாண்டி தலைமுறையின் ஆரோக்கியத்தை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க:மன அழுத்தத்தில் ஆண், பெண் இடையே வேறுபாடு: ஆய்வு முடிவு கூறுவது என்ன?