சென்னை:கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் வெல்லம். பதனிடப்படாமல் தயாரிக்கப்படுவதால் இதில் அதீத மருத்துவ குணம் உள்ளது. பல இனிப்பு மிகுந்த உணவுகளிலும், பலகாரங்களில் சேர்க்கப்படும் இந்த வெல்லம், வெள்ளை சர்க்கரையை விட ஆரோக்கியமானது. வெல்லத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள், விட்டமின்கள் போன்றவை உள்ளன. செரிமான பிரச்சினை முதல் மாதவிடாய் வலி, தாய்பால் சுரப்பு என அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யும்.
பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்துக்கள், விட்டமின் பி காம்பிளக்ஸ், விட்டமின் சி, டி2, E ஆகிய சத்துக்கள் நிறைந்த வெல்லத்தை உணவில் சேர்த்து கொண்டால் பல நன்மைகள் உள்ளன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது, பெண்களின் தீராப் பிரச்சினையான மாதவிடாய் வலியை போக்குவது, இரத்த சோகையைக் குறைப்பது என வெல்லத்தின் பலன்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
வெல்லத்தை அப்படியே சாப்பிடுவதை விட, சில பொருட்களுடன் சேர்த்து உண்ணும் போது, அதன் பலன் இரட்டிப்பாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி எந்தெந்த பொருட்களோடு, வெல்லதை சாப்பிடலாம்?, அதனால் என்ன பலன் என்பதை பார்க்கலாம்.
- வெல்லம் + நெய்:உணவு உண்டப்பின், ஒரு ஸ்பூன் வெல்லத்தோடு சிறிது நெய் கலந்து சாப்பிட்டால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும். ஹார்மோன் சமநிலையின்மையை பராமரிக்க உதவும்.
- வெல்லம் + கொத்தமல்லி:வெல்லத்தோடு கொத்தமல்லியை சேர்த்து சாப்பிட்டால் மாதவிடாயின் போது ஏற்படும் அதீத இரத்தப் போக்கை சரி செய்யும். மாதவிடாய் வலிகளும் தீரும். PCOD பிரச்சினைகளையும் குறைக்கும்.
- வெல்லம் + பெருஞ்சீரகம்: வெல்லத்தோடு சிறிது பெருஞ்சீரகத்தையும் சேர்த்து உட்கொண்டால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
- வெல்லம் + வெந்தயம்: இப்போதெல்லாம் இளம் வயதினருக்கே நரை முடி, முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் வந்துவிட்டது. இவற்றை சரிசெய்ய வெல்லத்தோடு சிறிது வெந்தயம் சேர்த்து உண்ணலாம். வெந்தயத்தில் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை முடியின் நிறம், முடியின் அடர்த்தி, பொடுகுத்தொல்லை போன்றவற்றை சரி செய்கின்றன. முடி வலுவாகும்.
- வெல்லம் + கோந்து/பிசின்: வெல்லத்தோடு சிறிது கோந்து சேர்த்து உண்டால் எலும்புகள் நன்கு வலுவடையும். பாலூட்டும் தாய்மார்கள் இவற்றை சாப்பிட்டால், அதிகளவு பால் சுரக்கும்.
- வெல்லம் + ஆலிவ் விதைகள்: நாம் உண்ணும் உணவில் உள்ள ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்தை உடல், விரைவாக எடுத்து கொள்வதற்கு, வெல்லத்தோடு ஆலிவ் விதைகளை சேர்த்து உண்ணலாம். மேலும் இந்த கலவை முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- வெல்லம் + எள்:குளிர்காலங்களில் வெல்லத்துடன் எள் விதைகளை சேர்த்து உண்டால், சளி, இருமல் மற்றும் காய்ச்சலில் இருந்து விடுபடலாம்.
- வெல்லம் + வேர்க்கடலை:வேர்க்கடலையில் கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் ஆகியவை உள்ளன. வேர்க்கடலையோடு வெல்லத்தை சேர்த்து உட்கொண்டால் உடலின் ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பவர்களுக்கு இது நல்லதொரு தீர்வாகும். ஏனென்றால் இந்த கலவையை சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்தது போல் தோன்றும், திரும்பவும் பசிக்காது.
- வெல்லம் + மஞ்சள்:மஞ்சளில் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. வெல்லத்துடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- வெல்லம் + உலர்ந்த இஞ்சி பொடி:பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளில் இருந்து விடுபடவும், காய்ச்சலில் இருந்து குணமடையவும் வெல்லத்தோடு இஞ்சிப்பொடியை கலந்து சாப்பிடலாம்.
இதையும் படிங்க:இரவில் பால் குடிக்கலாமா? கூடாதா? சந்தேகம் தீர இதப்படிங்க முதல்ல!