சென்னை:உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்றால் மருத்துவர்கள் சொல்லக்கூடிய முதல் அறிவுரை, பழங்கள், கீரைகள், காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பது தான். அடுத்த சில நேரங்களிலேயே வீட்டில், பழங்கள் நிறைந்திருக்கும். அப்படி வெளியில் இருந்து வாங்கி வரும் பழங்களிலும், காய்கறிகளிலும் பூச்சிக்கொல்லிகளும் நிறைந்திருக்கும். ஆகையினால் அவற்றை நன்கு கழுவியப் பின் தான் உண்ண வேண்டும் என்பதை அனைவரும் அறிவோம்.
பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்க்கப்பட்ட பழங்களை உண்ணுவதால் ஏற்படும் தீமைகள்:செடிகள் வளர்வதற்கென்று உரம், பூச்சிகளின் தொல்லையிலிருந்து செடிகளைக் பாதுகாக்க, பூச்சிக்கொல்லி மருந்துகள், இது மட்டும் போதாதென்று கிருமிகள் வேறு. இப்படியான பழங்கள் மற்றும் காய்கறிகளை தூய்மைப்படுத்தாமல் உண்ணும் போது, புட் பாய்சன் (Food Poison), வயிற்றுப் போக்கு, ஹார்மோன் பிரச்னைகள், தோல் பாதிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் இவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, மூளை, சிறுநீரகம் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. மேலும் இனப்பெருக்க மண்டல பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.
பூச்சிக்கொல்லி மருந்துகள்:பழங்களாக இருந்தாலும் சரி, காய்கறிகளாக இருந்தாலும் சரி, அவற்றை நன்கு கழுவும் போது, அவற்றின் மேற்பரப்பில் உள்ள தூசி போன்ற அசுத்தங்கள் மட்டுமே அகற்றப்படுகின்றன. கீரைகளில் பெரும்பாலும் நீயூரோடாக்ஸிக் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மனிதர்களுக்கும், விலங்கினங்களுக்கும் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.
97 சதவீத கீரைகள், பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆப்பிள் பழங்களில் டிஃபெனிலமைன் என்ற பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஆப்பிள்களில் 90% பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஸ்ட்ராபெர்ரி பழங்களில், மூன்றில் ஒரு பங்கு பூச்சிக்கொல்லி எச்சங்கள் ஒட்டியுள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது.