சென்னை:டென்ஷனா இருக்கு மச்சான் வா ஒரு டீ போடுவோம்.. தல வலிக்குது ஒரு காபி குடிக்கனும்.. ஒரே சோம்பலா இருக்கு டீயோ, காபியோ குடிக்கனும்.. இப்படி எதை எடுத்துக்கொண்டாலும் நம்மில் பலர் மூழ்கி இருப்பது டீ, காபி போதையில்தான். காலையில் எழுந்தவுடன் முதலில் நமது தொண்டையை நனைக்கும் இந்த டீ, காபி, சிலரது நாள் முழுவதையும் ஆக்கிரமித்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. சிலர் உணவு உண்பதைக் கூட தவிர்த்துவிட்டு டீ, காபியைக் குடித்தே உயிர் வாழ்வார்கள். இவர்களும் ஒருவகையில் போதைக்கு அடிமையானவர்கள்தான்.
அடிக்கடி டீ, காபி அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:வெறும் வயிற்றில் டீ, காபி அருந்துவது மிகவும் கெடுதலாகும். ஒரு சூடான டீ அல்லது காபி மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பது உண்மைதான். ஆனால் நாள் ஒன்றுக்கு 5 கப் வரை அருந்துவது செரிமானத்தையும், உறக்கத்தையும் பாதிக்கும். இதனால் மூளை சீரற்று செயல்படும் அபாயமும் உள்ளது. மேலும் அடிக்கடி டீ, காபி அருந்துவதால் உடலில் நீரிழப்பு ஏற்படும். மேலும் டீ, காபிகளில் உள்ள டானிஸ் என்ற வேதிப்பொருள், உடலில் இரும்புச்சத்து தங்குவதைத் தடுக்கும். இதனால் உடல் பலவீனமாகும்.
அதிகளவு டீ, காபி அருந்தும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?
- டீ, காபிக்கு அடிமையானவர்கள், டீ அல்லது காபியின் அளவை குறைத்துக் கொள்ளலாம்.
- டீ மற்றும் காபியில் குறைந்த அளவிலான தேயிலை தூளையும், காபித் தூளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
- அடிக்கடி டீ, காபி அருந்தும் பழக்கத்தை உடனடியாக கைவிட முடியாது என்பதால் கொஞ்சம் கொஞ்சமாகக் கைவிடலாம். ஒரு நாளைக்கு 5 கப் டீ அல்லது காபி குடிக்கும் நிலையில், அதை 3 கப் ஆகக் குறைத்துக் கொள்ளலாம். அதன் பின், 2 அல்லது 1 கப் ஆகக் குறைத்துக் கொள்ளலாம்.
- டீ, காபிக்குப் பதிலாக க்ரீன் டீ, சீமைச் சாமந்தி டீ (Chamomile tea) போன்றவற்றை அருந்தலாம். இது காஃபின் மீதான மோகத்தைக் குறைக்க உதவும்.
- உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் டீ, காபி பழக்கத்தைக் கைவிட முடியும்.
- தினமும் 4 கப் டீ அல்லது காபி அருந்துபவர்கள் 2 கப் டீ, காபி குடித்து, 1 கப் க்ரீன் டீ அருந்தலாம்.
- டீ, காபிக்கு மாற்றாக, ஆரோக்கியமான வேறு ஏதேனும் உணவின் மீது கவனத்தைத் திசை திருப்பலாம்.
- டீ, காபி குடிக்கத் தோன்றும்போது சூடான நீரை அருந்தலாம்.
இதையும் படிங்க:Spices For Weight Loss Tips In Tamil: அஞ்சறைப் பெட்டிக்குள் இப்படி ஒரு ரகசியமா? இது தெரியாம போச்சே.!