சென்னை:இரத்த நச்சு நீக்கம் என்பது உங்கள் இரத்த அணுக்களில் இருந்து தீங்கு விளைவிக்கும் கூறுகளை அகற்றும் செயலாகும். சுற்றுச் சூழல் மாசுபாடு, உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடலில் உள்ள இரத்தத்தில் நச்சுத் தன்மை சேர்கிறது. இரத்தம் பொதுவாகவே நச்சுத் தன்மையை அகற்றும் திறன் கொண்டதுதான் ஆனால், அதிகப்படியான நச்சுத் தன்மை இரத்தத்தில் சேரும்போது அதை நம் தனித்துவமான நடவடிக்கை மூலம் அகற்ற வேண்டும். இரத்தம் நச்சுத் தன்மை அடையும்போது உடல் சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்வோம். இந்நிலையில் இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்க உதவும் சில யோகாசனம் குறித்துப் பார்க்கலாம்.
(Wide-Legged Forward Bend)கால்களை விரித்து முன்னோக்கி வளைதல்; இந்த யோகா உங்கள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது. உங்களின் இரு கால்களையும் விரித்து தலையைப் பூமியை நோக்கி முன்பக்கமாக கீழே சாய்த்து மூச்சை உள் இழுத்து வெளிவிடும்போது வயிற்றில் ஒரு அழுத்தம் ஏற்படும். இந்த அழுத்தம் குடல் இயக்கத்தை மேம்படுத்தி நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
(Revolved Triangle Pose) முக்கோண வடிவில் உடலை வளைத்தல்; கால்களை விரித்து ஒரு பக்கமாகச் சரிந்து ஒரு கையால் அதன் மறுபக்கம் இருக்கும் காலை குனிந்து தொட்டுக்கொண்டு அடுத்த கையை மேலே நோக்கி நீட்டும் வகையிலான யோகா. பார்ப்பதற்கு உடலைச் சுழற்றியவாறு முக்கோண வடிவில் இருக்கும் இந்த யோகாவைச் செய்வதன் மூலம் உடல் சோம்பல் சரியாகி சுறுசுறுப்பு பெறுவதுடன் உடல் வலியும் நீங்கும். தசைகளை முறுக்கி உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன், கால்களுக்கு இடையில் 3 முதல் 5 அடி இடைவெளியை உருவாக்கி, உங்கள் வலது காலை முன்னோக்கி வைக்கவும், இடதுபுறம் காலை பின்னால் வைக்கவும்.
தொடர்ந்து உங்கள் உடற்பகுதியை முன்னோக்கி வளைக்கவும். பின்னர், உங்கள் வலது கையை, உங்கள் முதுகில் கொண்டு வாருங்கள். இடது கையை வலது காலை நோக்கி நகர்த்துங்கள். தொடர்ந்து வலது கையை மேலே தூக்க வேண்டும். இப்போது, மூச்சை வெளியேற்றத் தொடங்கி, வலது உள்ளங்கையால் பூமியைத் தொட வேண்டும். நிலையை மாற்றுவதற்கு முன்பு சுமார் 60 வினாடிகள் இந்த நிலையிலேயே இருங்கள். இது உடல் முழுவதும் ஊட்டச்சத்துக்களைச் சிறந்த முறையில் கொண்டு செல்ல உதவுகிறது. இந்த யோகா உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது.