தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sukhibhava

சமையல் செய்வது மன அழுத்தத்தை குறைக்குமா? - ETV Bharat

மன அழுத்தமானது இந்த நவீன வாழ்க்கை முறையுடன் தொடர்பு கொண்டு நம்மைப் பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனைச் சரி செய்ய மருத்துவம், பயிற்சிகள் எனப் பல இருந்தாலும் இயல்பாக அதனைக் கடந்து செல்ல என்ன வழி உள்ளது என்ற உங்கள் கேள்விக்குப் பதில் இங்கு உள்ளது.

வீட்டில் சமையல் செய்வது மன அழுத்தத்தை குறைக்குமா?
வீட்டில் சமையல் செய்வது மன அழுத்தத்தை குறைக்குமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 7:56 PM IST

சென்னை:வீட்டில் பெற்றோருடன் ஏற்படும் சிறு வாக்குவாதம், நண்பர்களுடனான மனஸ்தாபம், அலுவலக பணிச் சுமை என அனைத்தையும் மனதில் போட்டுக் குழப்பி அதனை எதிர்கொள்ள முடியாமல் மன அழுத்தத்திற்குள் சென்று விடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர் சிலர்.

முன்பெல்லாம், நாற்பது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு வந்து கொண்டிருந்த இந்த மன அழுத்தப் பிரச்னை, தற்போது நிலவும் பல உளவியல் காரணங்களால் சிறு குழந்தைகளிடமே ஏற்படுகிறது. அதிக நேரம் ஸ்மாட் போன் பார்த்து வந்த குழந்தைகளின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவது, செயல்திறன் பாதிக்கப்படுவது போன்ற பல பிரச்னைகளை நாமே கண்கூட பார்த்திருப்போம்.

ஆனால் இந்த மன அழுத்தம் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், தாக்கத்தை ஏற்படுத்தி பெரும் நோயாகவே பரவிவருகிறது. இதனால் இளம் வயதிலேயே இரத்த கொதிப்பு, பக்கவாதம், உடல் பருமன், மாரடைப்பு மற்றும் நீரிழிவு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

மன அழுத்தத்திற்கான காரணம்:

  • மனதளவில் அதிகமான சுமையை உணருதல்
  • மனதில் ஏற்படும் பயம்
  • எதிர்காலத்தைப் பற்றிய கவலை
  • பொருளாதார சிக்கல்
  • நேசிப்பவரின் மரணம்
  • எதிர்மறை எண்ணம் ஆகியவை மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட:

இந்த கொடிய நோயிலிருந்து விடுபட்டால் போதும் என நினைத்து ஆண், பெண் என அனைவரும் பாரபட்சமின்றி மது, போதை போன்ற பழக்கங்களில் போய் சிக்கிக் கொள்கின்றனர். இந்த உயிர் கொள்ளும் மன அழுத்த பிரச்னையில் இருந்து விடுபட யோகா, மெடிடேஷன், போதுமான அளவு தூங்குவது போன்றவற்றைப் பின்பற்றலாம்.

அதற்கு நேரமில்லை எனத் தவிக்கும் சிலருக்கு இந்த மன அழுத்த பிரச்னையில் இருந்து விடுபடச் சமையல் ஒரு சிறந்த வழியாக அமையும். கரோனா பெருந்தொற்று காலங்களில் ஆண்கள் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் வீட்டை விட்டு எங்கும் செல்ல முடியாமல் தவித்தபோது கிடைத்த ஒரே ஆருதலும், தீர்வும் சமையலாக மட்டுமே இருந்தது.

இதையும் படிங்க: ஓவர் டியூட்டியால் இவ்வளவு பாதிப்புகளா?.... மருத்துவர்கள் விளக்கம்!

சமையல் செய்யும் போது நம் படைப்பாற்றல் வெளிப்படும், உணவில் என்னென்ன சேர்க்க வேண்டும் எனும் கட்டுப்பாட்டுடன் இருப்போம், நமக்காகச் செய்கின்றோம் என்ற உணர்வு நம் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும். அந்த வகையில் சமையல் மன அழுத்த பிரச்னைகளில் தீர்வு காண எப்படி உதவுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இது நினைவுகளைச் செயல்படுத்துகிறது:பொதுவாகச் சமையல் என்பது அம்மாவிடமோ அல்லது வீட்டில் நெருக்கமாக உள்ளவர்களிடமோ இருந்து தான் கற்றுக்கொள்வோம். அந்த வகையில் மன அழுத்தத்தில் தவிக்கும்போது நாம் செய்யும் சமையல் முறை சிறு வயது நினைவுகளைத் தூண்டும். நம் குழந்தைப் பருவத்தில் செய்த குறும்பு செயல்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் அது நமக்கு நினைவுபடுத்தும்.

எதிர்மறை எண்ணங்களுக்கு இடமில்லை:சமையலில் ஈடுபடும்போது அடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருப்போம், இது எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கிறது. இதனால் வேறு எந்த பிரச்னைகளிலும் கவனம் செல்லாமல் பார்த்துக்கொள்கிறது.

உணவு மீதான காதல்:உலகில் அனைவருக்குமே தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பது உணவின் மீதான அதிக காதல். அதனால் நமக்குப் பிடித்த உணவைச் சமைக்கும் போது மிகவும் ரசித்து விருப்பத்துடன் சமைப்போம். நல்ல உணவை உண்பதற்காக அதை முழு மனதுடன் சமைப்போம். இதனால் சோர்வுகள் நீங்கி உடலும் மனதும் உற்சாகம் அடைகிறது.

நறுமணம் நம் புலன்களை எழுப்புகிறது:அரோமாதெரபி சமீப வருடங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறது. மன அழுத்த உணர்வுகளை மரத்துப் போகச் செய்வதாகவும், உணவில் உள்ள நறுமணம் உங்கள் உணர்வுகளைச் செயல்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் நாம் சமைக்கும் போது பயன்படுத்தும் மசாலா பொருட்களின் மணம் நம் மனதை மகிழ்ச்சியாக்கும்.

  1. ஆப்பிள் - ஆப்பிளை முகர்ந்து பார்ப்பது தலைவலி மற்றும் பல்வேறு வகையான ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும்.
  2. தேநீர் - பிளாக் டீ அல்லது கிரீன் டீ குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது, நச்சுகளை நீக்குகிறது மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது.
  3. தேங்காய்- வாசனையை உள்ளிழுப்பது மற்றும் தேங்காய் நுகர்வு அதிக இதயத் துடிப்பைக் குறைத்து மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
  • சமையல் நமது படைப்பாற்றலுக்கு இடம் தருகிறது:ஒரு உணவை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. அதனால் நாள்தோறும் செய்யும் அதே உணவை வேறு விதமாகச் செய்து பார்க்கலாம். புதிய மசாலாக்கல் சேர்க்கலாம், வித்தியாசமாக அரைத்து பின் சேர்க்கலாம். இது நமக்குள் இருக்கும் படைப்பாற்றலை வெளிப்படுத்த உதவும். பெயிண்டிங் செய்வது, வரைவது மட்டும் தான் கலை என்பதில்லை சமையலும் கலை தான்.
  • அமைதியான சூழலைக் கொடுக்கும்:கூட்டம், கூச்சல், குழப்பம், போக்குவரத்து சத்தங்களிலிருந்து சற்று விலகி அமைதியான சூழலைச் சமையலறை வழங்குகிறது. இந்த அமைதியான குழலில் நமக்காகச் செய்துகொள்ளும் காரியம் நம்மை மேலும் வலுப்படுத்தும். சமையலறையில் கேட்கும் நீர் கொதிக்கும் சத்தம், உணவு தாளிக்கும் சத்தம், உணவை கிளறும் சத்தம் ஆகியவை நம் மனதை மென்மையாக்கும்.
  • இது ஒரு திருப்தி உணர்வைத் தருகிறது: நாம் விரும்பியதை மன நிறைவுடன் சமைத்து உண்பது முழு திருப்தியைத் தருகிறது. நீங்கள் மற்றவர்களுக்குச் சமைக்கும் போது, ​​​​உங்கள் சுயமரியாதை மற்றும் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் தன்னம்பிக்கை வளர்வதோடு மன அழுத்தத்தைப் போக்கச் சிறந்த வழியாகவும் சமையல் அமைகிறது.

மன அழுத்தம் வாழ்க்கையை மட்டுமல்லாமல் உடலையும் பாதிக்கும் நோய், அதனை எளிதாக நினைத்து கடந்து விடாமல் விரைவில் தீர்வு காணுங்கள். இனி தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ள முடியாத பிரச்னைகள் வரும்போது நேராக சமையலறை நோக்கி நடையை கட்டி சமையல் செய்து, உங்கள் மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: “தங்கப்புள்ளே..” உங்கள் குழந்தையும் நீங்களும் நட்பாக இருக்கிறீர்களா? - ஒரு சின்ன டெஸ்ட்!

ABOUT THE AUTHOR

...view details