சென்னை: உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் அதிக சத்துள்ள முட்டையை விரும்பாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இதன் காரணமாக தற்போது எல்லார் வீடுகளிலும் முட்டை உணவாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் முட்டை ஓடுகளை மட்டும் குப்பைகளில் தூக்கி வீசுகிறோம். அப்படி நாம் குப்பைகளில் எறியும் முட்டை ஓட்டில் எவ்வளவு நன்மைகள் உள்ளன என்று தெரியுமா?..
முட்டை ஓடுகளை வைத்து என்ன செய்வது என்று யோசிக்கும் போது, முட்டை ஓடுகள் செடிகளுக்கு நல்ல உரம் என்று தான் நமக்கு தெரியும். ஆனால் முட்டை ஓடுகள் மண்ணிற்கு மட்டும் உரம் அல்ல.. அழகிற்கும் தான். முதலில் முட்டை ஓட்டில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்று தெரிந்து கொள்வோம். ஒரு கிராம் முட்டை ஓட்டில், 400 மி.கி கால்சியம், புராட்டின், ப்ளூரைடு, மெக்னீசியம், செலீனியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
முட்டை ஓடுகளை எப்படி பயன்படுத்த வேண்டும்:முட்டையின் ஓடுகளை சேமித்து வைத்து, வெந்நீரில் ஊற வைத்து சுத்தம் செய்ய வேண்டும். அதன் பின் அவற்றை நன்றாக உலர்த்தி, பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம்.
இறந்த செல்களை நீக்க ஃபேஸ்பேக்: இறந்த செல்கள் முகத்திலேயே தங்குவதால், சீரற்ற சருமம், கருமை, கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படும். அதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவது அவசியம். முட்டை ஓடுகள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை உற்பத்தி செய்யும் பண்புகளைக் கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ஓடுகளில் உள்ள கால்சியம் புதிய செல்களை உற்பத்தி செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.