பண்டிகைகள் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாதவை. பண்டிகைகளுக்கு சில மாதங்களுக்கு முன்பே ஆடைகள் தேர்ந்தெடுப்பது என தயாராகி விடுகிறோம். ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவறுவதால் நம் உடல்நிலை பண்டிகைகளில் இருந்து நம்மை தூர விலக்கி விடுகின்றது. பண்டிகைகளுக்கு எப்படி புத்தாடை, பலகாரங்களுடன் தயாராகிறோமோ, அதுபோல ஆரோக்கியமான பழக்க வழக்கங்கங்கள் மூலம் உடல்நலத்தையும் தயார்படுத்த வேண்டும்.
உடலையும் மனதையும் ஆரோக்கியமாக பராமரிக்க யோகாசனங்கள் மிகவும் உதவுகின்றன. ஆசனங்கள், சுவாச முறைகள் மற்றும் தியானம் போன்றவைகளில் ஈடுபடுவதன் மூலம் இந்த தீபாவளி பண்டிகை காலம் முழுவதும் நீங்கள் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கலாம்.
ஜானு சிரசாசனம்: இந்த ஆசனம் உங்கள் முதுகுத்தண்டுக்கு நல்ல நீட்சியைக் கொடுத்து மிருதுவாக்கும். இது உங்கள் வயிற்று மற்றும் இடுப்பு தசைகளையும் பலப்படுத்துகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.
உஷ்த்ராசனம்: ஒட்டக போஸ் என்று அறியப்படும் உஷ்த்ராசனம் உங்கள் முதுகெலும்பை பலப்படுத்துகிறது, செரிமானத்திற்கு உதவுகிறது. பெண்கள் கர்ப்பமாக இருந்தால், முழங்கால் அல்லது கழுத்தில் காயம் இருந்தால் அல்லது கடுமையான முதுகுவலி இருந்தால் இந்த யோகாசனத்தை தவிர்க்கவும்.
உஜ்ஜயி பிராணயாமா: பிராணயாமம் எப்போதும் உங்கள் தினசரி பயிற்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். வெற்றி மூச்சு என்று அழைக்கப்படும் உஜ்ஜயி பிராணயாமா ஒரு எளிய பயிற்சி. இது நமது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவது மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்திற்கும் உதவுகிறது. மேலும் இந்த பயிற்சி நமது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.