சென்னை:உணவு உட்கொள்வது அதிலும் ஆரோக்கியமான உணவு உட்கொள்வது என அனைத்தும் தாண்டி, உணவை நேரா நேரத்திற்கு சரியாக உட்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அல்சர் உள்ளிட்ட பல நோய்கள் வந்துவிடும் என வீட்டில் உள்ள பெரியவர்களும், மருத்துவர்களும் சொல்லிக் கேட்டிருப்போம். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நேரம் தவரினாலும் உணவு தவரக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள். ஆனால் உணவு உட்கொள்வதற்கு வீட்டில் உணவு இருக்கிறதோ இல்லையோ பசி இருக்க வேண்டும் என்றே நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அந்த வகையில் இது குறித்து எழுதியுள்ள திருவள்ளுவர், அதில் "மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்". எனக்கூறியிருப்பார். இதன் பொருள், " நாம் உண்ட உணவு செரிமானமாகி, கழிவுகள் நீங்கிய பின். பசி எடுத்து உண்டால், உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை". என்பதாகும். அதற்காக ஒரு வேளை சாப்பிட்டு விட்டு அதன் கழிவு வெளியேறும் வரை காத்திருந்து அடுத்த நாள் உணவு உட்கொள்வது அல்ல. அந்த அளவுக்கு வயிற்றை சுத்தமாக வைத்திருந்து பசியை உடல் உணர்ந்து அதன் பின் சாப்பிட வேண்டும் என்பதேயாகும்.
இது குறித்து பொதுநல மருத்துவர் சாந்த குமார் ஈடிவி பாரத் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அவர் கூறிய அறிவுறுத்தல்களை பார்க்கலாம்.
பொதுவாக உழைப்பு விஷயத்தில் மனிதர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று உடல் உழைப்பில் ஈடுபடும் மக்கள் மற்றொன்று உட்கார்ந்து வேலை செய்யும் மக்கள். குழந்தைகளை பொருத்த வரையிலும் வெளியே சென்று ஓடி ஆடி விளையாடும் குழந்தைகள் மற்றொன்று வீட்டிற்குள் அமர்ந்து மொபைல் மற்றும் தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள். இந்த இரண்டு வகைகளுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன.
உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள்: உடல் உழைப்பில் ஈடுபடும்போது இயல்பாகவே உடலில் உள்ள ஆற்றல் குறைந்து பசி எடுக்க ஆரம்பிக்கும். பசி எடுக்கும்போது உணவை உட்கொள்ளுவோம். அப்போது உடலும் தனக்கு தேவையான சத்துக்களை எடுத்துக்கொள்வதில் தீவிரமாக இரங்கி பணியாற்றும். இயல்பாகவே உடல் ஆரோக்கியம் பெறும். குழந்தைகளுக்கும் அப்படித்தான் வெளியில் சென்று ஓடி ஆடி விளையாடும் குழந்தைகளுக்கு இயல்பாகவே பசி எடுக்கும். அதற்கு தகுந்தார்போல் ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதன் மூலம் அவர்களின் உடல் எடை மற்றும் ஆரோக்கியம் அனைத்தையும் சமநிலையில் வைத்திருக்க முடியும்.
உடல் உழைப்பு இன்றி உட்கார்ந்தவாறு பணியாற்றுபவர்கள்: ஐ.டி, மருத்துவத்துறை, அலுவலகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பலர் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு உடலில் உள்ள ஆற்றல் அதிகம் தேவைப்படாது. இதன் காரணமாக பசி என்பதும் விரைவில் எடுக்காது. இருப்பினும் மணி அடித்தார்போல் சரியான நேரத்திற்கு உணவை உட்கொள்வார்கள். இப்படி உட்கொள்வதன் மூலம் உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேர அதிகம் வாய்ப்பு உள்ளதாக மருத்துவர் சாந்த குமார் தெரிவித்துள்ளார்.
உடலில் உள்ள இரண்டு ஹார்மோன்கள் உணவு விஷயத்தில் முக்கிய பங்காற்றுகின்றன.. க்ரோத் ஹார்மோன் மற்றும் இன்சுலின் ஹார்மோன். க்ரோத் ஹார்மோன் பொதுவாக மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை உடலில் தனது பணியை செய்துகொண்டு இருக்கும். அதேபோல இன்சுலின் ஹார்மோன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணிகளை மேற்கொள்ளும்.