ஹைதராபாத்: கடுகு எண்ணெய்யின் ஊட்டச்சத்து, குணங்கள், நன்மைகள் குறித்து அறிந்து கொள்வோம்.
நம் அன்றாட உணவில் பல வகையான எண்ணெய்களை பயன்படுகிறோம். அதில் வெகு சிலர் மட்டுமே மிகவும் குறைந்த அளவில் கடுகு எண்ணெய்யை பயன்படுத்துகின்றனர். ”கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்பது பழமொழி. அதன்படி சின்னஞ்சிறிய கடுகு எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
முதலில் எண்ணெய் குறித்து அறிந்து கொள்ளுங்கள்
சமையலுக்கும், இன்னபிற உபயோகங்களுக்கும் தேங்காய் எண்ணெய், எள் (நல்லெண்ணெய்), கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவை சிறந்ததாகப் பார்க்கப்படுகின்றன.
சந்தையில் இதயத்துக்கு நன்மை அளிக்கும் என்று கூவிக்கூவி விற்கப்படும் சூரியகாந்தி எண்ணெய் உடலுக்கு நல்லது என்றாலும், செக்கு ஆலைகளில் மட்டுமே உடலுக்கு ஏற்றதாகக் கிடைக்கிறது. மற்றவை அனைத்தும் கலப்படம் தான். அவர்களின் எண்ணெய் விற்கும் பாக்கெட்டை உற்றுப் பார்த்து சோதித்தால், அதன் உண்மைத் தன்மை விளங்கும்.
செக்கில் கிடைக்கும் எண்ணெய்களை தவிர மற்றவைகளில், முக்கிய மூலக்கூறுகளாகக் கருதப்படும் பொருள்கள் சிறிதளவே சேர்க்கப்பட்டிருக்கும். மற்றவை அனைத்தும் கலப்படப் பொருள்கள் தான். அதாவது நடுத்தர வர்கத்துக்கு ஏற்ற விலையில் விற்கப்படும் பெரும்பாலான எண்ணெய் வகைகள் உடல்நலத்திற்கு ஏற்றதல்ல. ஆம், முதலில் ரீஃபைண்ட் எண்ணெய்களுக்கு நோ சொல்லுங்கள்.
எண்ணெய் பயன்படுத்தும் முறை
அனைத்து எண்ணெய் வகைகளுக்கும் வெவ்வேறு குணங்களும் நன்மைகளும் உள்ளன. பெரும்பாலான மக்கள் ஒன்று அல்லது இரண்டு எண்ணெய்களை மட்டுமே சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். ஆனால், அது சரியான உணவு முறை கிடையாது.
அனைத்து விதமான சத்துக்களும் நம் உடலுக்குத் தேவைப்படும். எனவே செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றில் சிறிதளவேனும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை உணவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
கடுகு எண்ணெய்
- தாவரவியல் பெயர்: ப்ராசிகா ஜூன்சியா
- குடும்பம்: பிராசிகாசியா
- பொது பெயர்: சார்சொன் கா டெல்
கடுகு எண்ணெய் குணங்கள்
இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் கடுகு எண்ணெய் பயன்படுத்தாத ஒரு குடும்பத்தை கற்பனை செய்வது கூட கடினம். இது பூஞ்சைத் தொற்று நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், ஜலதோசத்தை குணப்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், சருமத்திற்கு ஊட்டமளிக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும், வாய் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் என பல பிரச்னைகளுக்குத் தீர்வாகவும், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டும் உள்ளது. இந்தியர்களின் உணவு முறைகளிலும் கடுகு எண்ணெய் இன்றியமையாததாக இருக்கிறது.
கடுகு எண்ணெய் பயன்கள்
- கடுகு எண்ணெயில் எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பு அதிகமாக உள்ளது. இந்த எண்ணெயில் ஒமேகா 3/6 ஃப்பேட்டி அசிட் அதிகமாக இருக்கிறது.
- பதப்படுத்தி வைக்கும் பொருள்களில் இந்த எண்ணெயை சேர்க்கலாம். சீக்கிரம் வீணாகக் கூடிய அதாவது தேங்காய், தேங்காய் பால் சேர்க்கும் உணவுகளில் இந்த எண்ணெயை சேர்க்கலாம்.
- கைகளில் அரிப்பு, புண்கள், தேமல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கடுகு எண்ணெயை தேய்த்து வந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வராது. இந்த கடுகு எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் (Anti Fungal Properties) இருக்கிறது.
- கடுகு எண்ணெய் முடி சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயத்தை பொடி செய்து கடுகு எண்ணெயுடன் கலந்து முடிகளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின்னர் தலையை கழுவலாம்.
- கடுகு எண்ணெய் குளிர்ச்சித் தன்மை அற்றது. இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
- கடுகு எண்ணெயைத் தடவி உடலில் மசாஜ் செய்து வந்தால் உடலில் இருக்கும் தேவையில்லாத டாக்சின்ஸ் வியர்வையில் வெளியேறிவிடும்.
கடுகு எண்ணெய் டிப்ஸ்
- கடுகு எண்ணெயை மீன் குழம்பு, மீன் வருவலில் சேர்க்கலாம் காட்டம் தெரியாது. இந்த எண்ணெயில் நுண்ணுயிர் கொல்லி இயற்கையாகவே உள்ளது.
- பலருக்கு பற்களில் ரத்த சிதைவு இருக்கும். அந்தப் பிரச்னை சரியாக ஒரு ஸ்பூன் தூள் உப்பு, கடுகு எண்ணெய் ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் பல் துலக்கிய பின், இந்தக் கலவையை பற்களில் தடவி வந்தால் பற்களில் உள்ள ஈறு பிரச்னைகள் சரியாகிவிடும்.
- வயிற்றுக்கு கீழ் ரத்த சுழற்சி அதிகமாக இருக்கும். உங்களுக்கு எந்த இடத்தில் சதை குறைய வேண்டுமோ, அந்த இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
- கடுகு, மஞ்சள் சம அளவு எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி காதில் சில சொட்டுக்கள் விட தலை வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
- கடுகு 100, சீயக்காய் ஒரு கிலோ, துவரை 100 கிராம், வெந்தயம் அரை கிலோ அரைத்துப் பொடி செய்து கொண்டு தலைக்கு பயன்படுத்தவும். தலை முடி நிலைக்கும்.
- கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதியில் வரும் அடையாளங்களை ஒழிக்க சூடான கடுகு எண்ணெயுடன் வெண்ணெயை கலந்து தினமும் வயிற்றில் தடவி வரவும்.
- கடுகு எண்ணெய் ஆறு சொட்டுகள் எடுத்து சூடாக்கி அதை அரிப்பு, தோல் உதிரும் இடங்களில் தடவி மசாஜ் செய்தால் அரிப்பு பறந்து விடும்.
- கோடைக் காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்து பூசப்படுகிறது.
*பின்குறிப்பு: மேற்கூறியவைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்ததாக இருக்காது. எனவே இவை குறித்து ஆயுர்வேத மருத்துவரை அணுகிய பின் உபயோகிக்கலாம்.