விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா பாட்டகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி, தனலட்சுமி தம்பதியின் மகள் இலக்கியா (27). தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயார் தனலட்சுமி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் பெருமாள் பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு இலக்கியாவை திருமணம் செய்து கொடுத்தார். கருப்பசாமி தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இலக்கியா நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துகொண்டதாகக் கூறி ஜமீன் கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாரதார நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர். அங்கிருந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் (மார்ச் 18) கொண்டு வந்தனர்.
இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தாய் தனலட்சுமி, அவரது உறவினர்கள் இது தற்கொலை அல்ல கொலை எனக்கூறி் கருப்பசாமி, அவரது தந்தை பெருமாள், தாயார் கருப்பாயி ஆகிய மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோட்டாட்சியர் காளிமுத்துவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் செய்யும் உறவினர்கள் இதைத் தொடர்ந்து, உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு தென்காசியிலிருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான காவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
பின்னர் தற்கொலை தொடர்பாக உறவினர்கள் கூறுகையில், "திருமணம் நடக்கும் போது வரதட்சனை அதிகமாக கேட்டனர். ஆனால் 10 சவரன் தங்கநகைகள் மட்டுமே போட்டு திருமணம் செய்து கொடுத்தோம். திருமணமானது முதல் கருப்பசாமி இலக்கியாவிடம் பலமுறை நகைக் கேட்டு தகராறு செய்து அவரது தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம்போல் கருப்பசாமி தகராறு செய்து இலக்கியா தாய் வீட்டிற்கு செல்லும் போது சமாதானம் செய்துள்ளார். அப்போது, செல்போனில் தாயிடம் நன்றாகப் பேசிய இலக்கியா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்யவேண்டிய அவசியம் இல்லை எனக்கூறினர். இது தற்கொலை அல்ல கொலை. எனவே, உடனடியாக அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சந்தேகத்தின் பேரில் காவல்துறை விசாரணை: தாய், மகள் விஷம் குடித்து தற்கொலை!