விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அய்யனார்கோயில் செல்லும் சாலையில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் இந்த பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுவதாகவும்; இதனால் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வாழ்க்கையைத் தொலைந்து போதைக்கு அடிமையாகி உள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்து வந்துள்ளனர்.
இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மனைவி செல்வராணி (35) செங்கற்களை சாலையில் அடுக்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்ட செல்வராணி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட அனைவரிடமும் ஏற்கெனவே இதுகுறித்து புகார் அளித்துள்ளதாகவும்; ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.