சாத்தூர் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் மாதவி (29). இவரும் அதே பகுதியில் வசிக்கும் முனியசாமி என்பவரும் கடந்த 2010 ஆண்டு முதல் காதலித்து வந்துள்ளனர். அப்போது வேலை இல்லாமல் வீட்டில் இருந்த முனியசாமிக்கு, 2014 ஆம் ஆண்டில் காவல்துறையில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்த பின்பும் மாதவியுடன் தொடர்பில் இருந்த முனியசாமி, அவர் கர்ப்பம் ஆனது தெரிந்ததும் நழுவ ஆரம்பித்துள்ளார். முனியசாமியின் குடும்பத்தினரும் அவருக்கு வேறு இடத்தில் பெண் பார்க்க தொடங்கியுள்ளனர்.
இதனையறிந்த மாதவி 2014 ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரையடுத்து, காவலர் முனியசாமி மாதவியை திருமணம் செய்து காவலர் குடியிருப்பில் இரண்டாண்டு காலம் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், அதன் பின்பு வீட்டுக்கு செல்வதை முனியசாமி நிறுத்தியதால், குடும்பத்தை நடத்த முடியாமல் மாதவியும், குழந்தையுடன் தன் தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.