மாறிவரும் உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதற்கிணங்க உண்ணும் உணவு முதல் தொழில்நுட்பம் வரை அனைத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது உலகம் முழுவதுமுள்ள சந்தைகளில் மரபணு மாற்றப்பட்ட விதைகள் மூலம் கிடைத்த காய்கறிகள், பழங்களே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
உலகமயச் சூழலில், பாரம்பரிய அடையாளங்கள், பண்பாடு, வரலாறு ஆகியவற்றை மீட்கும் சிந்தனை உருவாகியுள்ள நிலையில், மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
என்னதான் மரபணு மாற்றப்பட்ட விதைகள் உற்பத்தியை அதிகரித்தாலும் அவற்றிலுள்ள சத்துக்கள் பாரம்பரியமான வீரியமிக்க நாட்டு விதைகளைப் போல் இருப்பதில்லை என்ற கருத்தும் அனைத்துதரப்பு மக்களிடமும் இருந்துவருகிறது. இயற்கை விவசாயிகள், பாரம்பரியமான விதைகளை மீட்பவர்கள், அந்த விதைகளை மக்களுக்கு கொடுத்து விளைவிக்க முயற்சிக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் (32) என்ற இளைஞர், வீரியமிக்க பாரம்பரியமான நாட்டு விதைகளைப் பாதுகாத்து அவற்றை தன்னுடைய நர்சரி கார்டனில் வைத்து விற்பனை செய்துவருகிறார்.
பாரம்பரியமான நாட்டு விதைகளைப் பாதுகாக்கும் இளைஞர் இதுகுறித்து சரவணக்குமார் கூறுகையில், " கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்து நாட்டு விதைகளை சேகரித்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கிவருகிறேன். பாரம்பரிய விதைகளில் இயற்கையான சத்துக்கள் முழுமையாக இருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகள் ரசாயன கலப்பு மூலம் உருவாக்கப்படுவதால் புற்றுநோய் போன்ற பல்வேறு விதமான நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. நாட்டு விதைகளை பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலில் இருந்து மீண்டும் விதைகளை எடுத்துக்கொள்ளலாம்" என்கிறார்.
சமீபகாலமாக நாட்டு விதைகளைப் பயன்படுத்தி வரும் ஆனந்தகுமார் கூறுகையில், " மரபணு மாற்றப்பட்ட விதைகளை அருகாமையில், கடைகளில் வாங்கிப் பயன்படுத்தி வந்தேன். தற்போது நாட்டு விதைகள் மூலம் பயிரிடப்பட்ட காய்கறிகள் மிகவும் ருசியாகவும், சத்தானதாகவும் இருக்கிறது. அடுத்த தலைமுறையினரும் இதைப் பயன்படுத்த வேண்டும்" என மற்றவர்களுக்கும் கோரிக்கை விடுக்கிறார்.
பல்வேறு அறிவியல் மாற்றங்களினால் நாட்டு விதைகள் அழிந்துவரும் சூழலில், இவரைப்போன்ற இளைஞர்கள் பாரம்பரிய மிக்க நாட்டுவிதைகளைப் பாதுகாத்து அவற்றை அனைத்துதரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க விரும்பும் முயற்சியை இப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
பாரம்பரிய நெல்விதைகளை சேகரித்து அதனை வருடந்தோறும் கண்காட்சியாக வைத்து மக்களுக்கு வழங்கிவந்த நெல் ஜெயராமன் போல், மக்களுக்கு பாரம்பரிய நாட்டு விதைகளை இலவசமாக வழங்கி வரும் சரவணக்குமாரின் செயல் பாராட்டத்தக்கதே.
இதையும் படிங்க:இயற்கை உணவுகளுக்கான 'மரபுச் சந்தை' - விவசாயிகள், பொதுமக்களிடையே பெருகும் ஆதரவு!