விருதுநகர் :காரியாபட்டி அருகேயுள்ள மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன், பாஞ்சாலி தம்பதியினர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக எட்டு ஏக்கர் பரப்பளவில் காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றை இயற்கையான முறையில் விவசாயம் செய்து வருகின்றனர்.
குளிர்ந்த மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்ற காய்கறிகளை வெயில் வாட்டி வதைக்கும் கரிசல் பூமியில் விளைவித்து இவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். கேரட், பீட்ரூட் வரிசையில் தற்போது ஆரஞ்சுப் பழங்களையும் விளைவித்துள்ளனர் இந்தத் தம்பதியினர்.
கரிசல் காட்டில் ஆரஞ்சு விளைவித்து சாதனை படைத்த விவசாயத் தம்பதி இது குறித்து பேசிய விவசாயி ராமசந்திரன், "எந்த மண்ணிலும் எல்லாவித காய்கறி, பழ வகைகளையும் விளைவிக்க முடியும். இயற்கை உரங்கள், மருந்துகளைப் பயன்படுத்தி முழுமையான உழைப்பைச் செலுத்தினால், நல்ல விளைச்சலைப் பெறமுடியும். ஆரஞ்சுப் பழம் மூன்று வருடத்தில் நல்ல விளைச்சலைத் தந்துள்ளது.
ஆரஞ்சுப் பழத்தை பயிரிடுவதை அதிகப்படுத்தலாம் என்ற எண்ணம் உருவாகியுள்ளது. வறண்ட நிலத்திற்கு மத்தியில் விவசாயம் செய்து வருகிறேன். பயிரிடப்பட்டு சாகுபடி செய்யப்பட்ட எலுமிச்சை, சப்போட்டா, கொய்யா, மா போன்ற பழவகைகள் மட்டுமின்றி அனைத்து வகையான காய்கறிகளையும் நாங்கள் இங்கு பயிரிட்டுள்ளோம்.
விளைச்சல்களை எங்களது தேவைக்கு எடுத்துக்கொண்டு குறைந்த லாபத்தில் மக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். முழுவதுமாக இயற்கை விவசாயம் செய்ய முடியாது. அதுபோல், செயற்கை உரங்களைப் பயன்படுத்தியும் முழுமையாக விவசாயம் செய்யமுடியாது. ஆகையால், 40 விழுக்காடு செயற்கை முறையையும், 60 விழுக்காடு இயற்கை முறையையும் பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறோம்" என்றார்.
இது குறித்து அவரது மனைவி பாஞ்சாலி பேசியபோது, "சீட்ஸ் என்னும் தொண்டு நிறுவனத்தின் மூலம் நாங்கள் பயிர் செய்வது குறித்த அறிவுரைகளைப்பெற்றோம். அந்தத் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறோம். அவர்களிடமிருந்து விதைகளைப் பெற்று விளைச்சல் எடுத்து வருகிறோம். இதுவரையில் அரசிடமிருந்து விவசாயத்திற்காக எவ்வித உதவியையும் பெற்றதில்லை. மான், பன்றி, மயில் போன்றவற்றால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுகிறது. அவற்றிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க மட்டும் அரசு வேலி அமைக்க உதவி செய்யவேண்டும்" என்றார்.
குளிர் பிரதேசங்களில் மட்டும் விளையக்கூடிய பல்வேறு வகையான பயிர்களை வறண்ட நிலப்பகுதிகளிலும் முறையான பாரமரிப்பு இருந்தால் நல்ல முறையில் விளைவிக்க முடியும் என்பதற்கு ராமச்சந்திரன், பாஞ்சாலி தம்பதியினரே சாட்சி.
இதையும் படிங்க :பாரம்பரியமான நாட்டு விதைகளைப் பாதுகாக்கும் விருதுநகர் இளைஞர்