அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்றன.
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது! - serial
விருதுநகர்: அருப்புக்கோட்டை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொள்ளை, வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாலசங்கர், ரமேஷ் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு ஊர்களில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை காந்தி நகரில் வாகனச்சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் கூறிய அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணைக்காக அழைத்து சென்றவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பாலசங்கர் மற்றும் ரமேஷ் என தெரியவந்தது. விசாரணையில் பல்வேறு மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்களை கைது செய்த காவல்துறையினர், 90 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.