அகில இந்திய தனியார் மருத்துவர்கள் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை கண்டித்து இந்தியா முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்குப் பின் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது இந்திய மருத்துவக் கழக செயலாளர் அறம் கூறுகையில், இது இந்தியாவில் உள்ள அனைத்து மக்களையும் பாதிக்கக் கூடியதாக உள்ளது. நீட் முறைப்படி மருத்துவக் கல்வியை நெறிபடுத்துகிறோம் எனக் கூறும் அரசு, இந்த மசோதாவில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்களுக்குரிய சீட்டில் 50 சதவீதத்தை அவர்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் எனக் கூறுவது மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடியதாகும்.
இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டங்களை பயின்று அங்கீகரிக்கப்பட்ட தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்ற பின்பும், இவர்களை நம்பாத அரசு நெக்ஸ்ட் எனும் தேர்வை புகுத்த முயற்சி செய்கிறது. இது மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும். இந்த தேர்வு மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்ற பின்பும் அவர்களுக்கான தகுதித் தேர்வாக கொண்டுவருவது முறையற்ற செயல். மேலும் நெக்ஸ்ட் தேர்வில் தோல்வியடைந்தால் அடுத்த தேர்வுக்கான கால அவகாசம் என்ன என்பதையும் குறிப்பிடவில்லை.
,
கல்வியையும், மருத்துவத்தையும் தனியாருக்கு தாரை வாக்கிறது மத்திய அரசு - க.அறம் மாநில மருத்துவக் கவுன்சிலுக்கு என இருந்த தனிப்பட்ட அதிகாரங்களை நீக்கிவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் மூலம் மாநில அரசு மருத்துவத்தின் மீதுள்ள பிடியை தளர்த்தி மத்திய அரசின் கீழ் கொண்டு வரும் சதியும் இதில் அடங்கியுள்ளது. மருத்துவனை மசோதாவில் மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் சதி அடங்கியுள்ளது.
தமிழகத்தை போன்று அனைத்து மாநிலங்களிலும் மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தால் மருத்துவர் பற்றாக்குறை இந்தியாவில் இல்லாமல் மாறிவிடும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சலினால் தான் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உலகத் தரத்தில் சிகிச்சை அளித்தும் என்ன நோயில் இறந்தார் என கண்டுபிடிக்க முடியவில்லை. மருத்துவம், கல்வி ஆகியவை அரசு தன்னுடைய பொறுப்பிலிருந்து மாற்றமடைந்து தனியார்மயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கல்வியையும் மருத்துவத்தையும் முழுவதுமாக வியாபார மையமாக மாற்றும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது, என்றார்.