பட்டாசுகள் வாங்க சிவகாசிக்குப் படையெடுக்கும் மக்கள்.. இந்தாண்டு புது வரவுகள் என்ன.. விருதுநகர்: இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையைப் பூர்த்தி செய்யும் தளமாக சிவகாசி விளங்குகிறது. சுமார் 1100 பட்டாசு ஆலைகளில் 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் 2 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். ஆண்டிற்குப் பட்டாசு உற்பத்தி மூலம் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறுகிறது.
பட்டாசு உற்பத்தி பணியைச் சார்ந்து சிவகாசியில் ஆயிரக்கணக்கான அச்சகங்களும் இயங்குகிறது. இப்படி லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பையும் பல்லாயிரம் கோடி வர்த்தகமும் நடைபெறும் தென் மாவட்டத்தில் உள்ள பிரதான தொழிலாக உள்ள இந்த பட்டாசு தொழில் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு விதமான நெருக்கடியைச் சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கு டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்துள்ள பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு, சரவெடி பட்டாசு தயாரிக்கத் தடை, பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப் பொருளுக்குத் தடை உள்ளிட்ட நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி வழக்கத்தை விட 30 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்டிற்கு 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில் தொடர்ந்து ஏற்படும் பல்வேறு நெருக்கடியால் படிப்படியாக உற்பத்தி குறைந்து ஆயிரம் கோடியை எட்டுவதே பெரும் சவாலாக உள்ளதாகக் கூறுகிறார்கள் உற்பத்தியாளர்கள்.
கடந்த ஆண்டு மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வு காரணமாக விலை உயர்ந்த பட்சத்தில் இந்த ஆண்டு அதே விலை நீடித்து வருவதாகவும் 20 சதவீதம் பட்டாசு விலை குறைந்துள்ளதாகவும் கூறும் பட்டாசு உற்பத்தியாளர்கள் அதிகாரிகளின் தொடர் ஆய்வு காரணமாகவும் நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களாலும் விற்பனை மந்தமாக உள்ளதாக வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இவையெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பல்வேறு ரக புதிய பட்டாசுகள் வருகை தந்துள்ளது குறிப்பாகச் சிறுவர்களைக் கவரும் வகையில் மோட்டு பட்லு, நட்சத்திர மயில், Ak 47 துப்பாக்கி, மதுரை மல்லி, வானில் சென்று மூன்று முதல் ஐந்து நிமிடம் வரையில் பல்வேறு வண்ணங்களில் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் என புதிதாக சந்தையில் விற்பனைக்கு களம் இறங்கியுள்ளன.
மேலும் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வரவேற்கும் விதமாக பேட் பந்து மற்றும் இளைஞர்களைக் கவரும் விதமாக சரவெடிக்கு இணையாக முற்றிலும் பாதுகாப்பான 90 வாலா உள்ளிட்டவைகள் புதிய ரக பட்டாசுகளாக விற்பனைக்கு வந்துள்ளது. இதுமட்டும் அல்லாது, அனைத்து தரப்பினரும் வாங்கக் கூடிய அளவிற்கு விலையும் குறைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர் பட்டாசு விற்பனையாளர்கள்.
இதையும் படிங்க:தீபாவளி 2023; விழுப்புரத்தில் 2,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!